ஈரோடு:ஜவுளி தொழில் பிரதான தொழிலாக உள்ளது. இதனை நம்பி லட்சக்கணக்கான தொழிலாளர்கள் உள்ளனர். சமீபகாலமாக நூலின் விலை ஏற்றத்தால் ஜவுளி உற்பத்தியாளர்கள், விசைத்தறியாளர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து நூல் விலை உயர்வு காரணமாக விசைத்தறியாளர்கள் தங்களது உற்பத்தியைக் குறைத்துள்ளனர். சில இடங்களில் ஜவுளி உற்பத்தியைக்கூட நிறுத்திவிட்டனர். நூல் விலையை ஒழுங்குமுறைப்படுத்திட வேண்டும் எனக் கோரிக்கைவைத்தனர். இதன்பின்னர் நூல் விலை சீரானது.
ஜிஎஸ்டி வரி உயர்வு
இந்நிலையில் ஜவுளி உற்பத்தியாளர்களுக்கு மற்றொரு பேரிடியாக சரக்கு - சேவை வரி ஐந்து விழுக்காட்டிலிருந்து 12 விழுக்காடாக உயர்த்தப்பட்டது. இதனால் அனைத்து வகையான ஜவுளி தொழில்கள் கடும் இழப்பைச் சந்திக்கும் சூழ்நிலை நிலவியது. இந்த சரக்கு - சேவை வரி உயர்வுக்கு கடும் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டன.
சரக்கு - சேவை வரி விதிப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து தமிழ்நாடு முழுவதும் இன்று ஜவுளி தொழில் சார்ந்தவர்கள் ஒருநாள் கடையடைப்புப் போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்திருந்தனர். இதனையடுத்து ஈரோடு கிளாத் மெர்ச்சன்ட்ஸ் அசோசியேஷன் சார்பில் இன்று ஒருநாள் அனைத்து ஜவுளி சார்ந்த நிறுவனங்கள் கடையடைப்புப் போராட்டத்தில் ஈடுபடும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி இன்று ஈரோட்டில் அனைத்து ஜவுளிக் கடைகள் குடோன்கள் அடைக்கப்பட்டுள்ளன. ஈரோடு மாநகரில் திருவெங்கடசாமி வீதி, ஈஸ்வரன் கோவில் வீதி, காமராஜர் வீதி, என்.எம்.மஸ். காம்பவுண்ட், அகில் மேடை வீதி, ராமசாமி வீதி, சொக்கநாத வீதி போன்ற பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. இதனால் எப்போதும் பரபரப்பாக இயங்கும் இடங்கள் அனைத்தும் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்படுகிறது.
ஆயிரக்கணக்கான ஜவுளிக் கடைகள் அடைப்பு