தமிழ்நாடு அரசின் சார்பில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவ - மாணவிகளுக்கு இலவச மடிக்கணினி ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஈரோடு மாவட்டத்தில் கடந்த 2017-18ஆம் கல்வியாண்டில் படித்த மாணவ - மாணவிகள் 500-க்கும் மேற்பட்டோருக்கு இலவச மடிக்கணினி வழங்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதுகுறித்து பலமுறை கோரிக்கை வைத்தும், சம்மந்தப்பட்ட அலுவலர்கள் உரிய விளக்கமளிக்கவில்லை எனத் தெரிகிறது.
மடிக்கணினி கேட்டு மாணவர்கள் போராட்டம் - வரம்புமீறி தாக்கிய காவல்துறை..!
ஈரோடு: இலவச மடிக்கணினி வழங்கக்கோரி சாலைமறியலில் ஈடுபட்ட 100-க்கும் மேற்பட்ட மாணவ - மாணவிகள் கைது செய்யப்பட்டனர். இக்கைது நடவடிக்கையின் போது மாணவர்களை காவல்துறையினர் சரமாரியாகத் தாக்கியதால் பதற்றம் நிலவியது.
இதேபோல் வீரப்பன்சத்திரம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, மாணிக்கம் பாளையம் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் படித்த 100-க்கும் மேற்பட்ட மாணவ - மாணவிகள் தங்களுக்கு உடனடியாக மடிக்கணினி வழங்கக்கோரி வீரப்பன்சத்திரத்தில் ஈரோடு-சத்தியமங்கலம் பிராதான சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சுமார் ஒரு மணிநேரத்திற்கும் மேலாக மாணவர்களின் போராட்டம் நீடித்த நிலையில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பாலமுரளி சம்பவ இடத்திற்கு வந்து மாணவ-மாணவிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
ஆனால் இதனை ஏற்கமறுத்து மாணவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் மாணவ - மாணவிகளை கைது செய்ய முயன்றனர். ஆனால் கைதாக மறுத்த மாணவர்களைச் சரமாரியாகத் தாக்கிய காவலர்கள், அடித்து இழுத்து வாகனத்தில் ஏற்றினர். இதனால் அப்பகுதியில் நீண்ட நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டதுடன், பதற்றமும் நிலவியது. இதேபோல கருங்கல்பாளையம், குமலன்குட்டை பகுதிகளிலும் மாணவர்கள் மடிக்கணினி வழங்கக்கோரி சாலைமறியலில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.