ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையிலிருந்து கீழ்பவானி திட்ட கால்வாய்கள் மூலம் பாசனம் பெறும் நிலங்களுக்கு ஆகஸ்ட் 14ஆம் தேதி முதல் தண்ணீர் திறக்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னதாக தெரிவித்திருந்தார்.
அதன்படி இன்று (ஆக.14) பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன், சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கருப்பணன் ஆகியோர் பவானிசாகர் அணையிலிருந்து பாசனத்திற்கு தண்ணீரை திறந்து வைத்தனர்.
இந்த நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் கதிரவன் உடனிருந்தார். இந்த பாசன நீர் மூலம் ஈரோடு, கரூர், திருப்பூர் மாவட்டங்களைச் சேர்ந்த 1 லட்சத்து 3 ஆயிரத்து 500 ஏக்கர் நிலங்கள் பயன்பெற உள்ளன. மொத்தமாக 120 நாள்களுக்கு 24 டிஎம்சி வீதம் தண்ணீர் திறந்து விடப்படும்.
அமைச்சர்கள் தண்ணீரை திறந்துவைத்த போது கீழ்பவானி வாய்க்கால் பாசனத்துக்கு 500 கனஅடி வீதம் படிப்படியாக உயர்ந்து இரண்டு ஆயிரத்து 300 கனஅடியாக திறந்துவிடப்படும். தற்போது அணையின் நீர்மட்டம் 102 அடியாகவும், நீர்வரத்து 3 ஆயிரத்து 661 கன அடியாகவும் உள்ளது.
இதையும் படிங்க:100 அடியை எட்டிய பவானி சாகர் அணை - விவசாயிகள் மகிழ்ச்சி