ஈரோடு: பொதுமக்களுக்கு கரோனா நிவாரண நிதியாக ரூ.4 ஆயிரம் வழங்கப்படும் என திமுக தேர்தல் அறிக்கையில் தெரிவித்திருந்தது. திமுக தலைமையிலான புதிய அரசு அமைந்ததும், கரோனா நிவாரணத் தொகை ஜூன் 3ஆம் தேதியிலிருந்து வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், கடந்த 10ஆம் தேதி முதல் 14 நாட்களுக்கு தமிழ்நாட்டில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்காத வகையில், கரோனா நிவாரணகத் தொகையின் முதல் தவணையாக ரூ.2 ஆயிரம் வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது.
நோய் தொற்றுப்பரவலை தவிர்க்க டோக்கன் முறையில் நிவாரணம் வழங்கப்படும் என முடிவு செய்யப்பட்டு, டோக்கன் வழங்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து இன்று (மே15) முதல் வரும் 22ஆம் தேதி வரை முதல் தவணை் தொகை வழங்கப்பட இருக்கிறது.
ஊரடங்கு காலத்திலும் ரேஷன் கடை காலை 8 மணி முதல் 12 மணி வரை செயல்படும், நாளொன்றுக்கு 200 பேருக்கு நிவாரணத் தொகை வழங்கப்படும் என அலுலர்கள் தெரிவித்திருந்தனர். தொற்று பரவுவதை கருத்தில் கொண்டு, பொதுமக்கள் தங்களின் டோக்கனில் உள்ள தேதியில் வந்து தொகையை வாங்க வேண்டும் எனவும், தொகையைப் பெற வரும் போது, கூட்டமாக வராமல், கரோனா வழிகாட்டுநெறிமுறைகளை கடைபிடித்து பணம் வாங்க வர வேண்டும் எனவும் தெரிவித்தனர்.
ஈரோடு மாவட்டம் மாணிக்கம்பாளையம் ஹவுசிங் யூனிட் பகுதியில் உள்ள ஒரு ரேஷன் கடையில் ரூ. 2 ஆயிரம் நிவாரணத் தொகை வழங்கும் பணியை வீட்டு வசதித்துறை அமைச்சர் சு. முத்துசாமி தொடங்கி வைத்தார். இதில் கலெக்டர் கதிரவன், மாநகராட்சி ஆணையாளர் இளங்கோவன் உட்பட அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர். அதைத்தொடர்ந்து ஈபிபி நகர், தண்ணீர்பந்தல்பாளையம், சித்தோடு, நசியனூர், சாணார்பாளையம் பகுதியில் உள்ள ரேஷன் கடைகளிலும் அமைச்சர் முத்துசாமி நிவாரண தொகை வழங்கும் பணியை தொடங்கி வைத்தார்.
கரோனா நிவாரணத் தொகை திட்டத்தை தொடங்கி வைத்த அமைச்சர் முத்துசாமி கூட்டம் கூடுவதை தவிர்க்கும் வகையில் ரேஷன் கடைகளில் தடுப்புகள் அமைத்து தனிமனித இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் வட்டம் போடப்பட்டு இருந்தது. அந்த வட்டங்களில் பொதுமக்கள் நின்று நிவாரண தொகையை வாங்கி சென்றனர். இதற்காக, இன்று காலை 6 மணி முதலே பொதுமக்கள் ரேஷன் கடைகளில் குவிய தொடங்கினர்.
முக கவசம் அணிந்தால் மட்டுமே பொருட்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்ததால், பொதுமக்கள் நிவாரண தொகையை வாங்க முக கவசம் அணிந்து வந்திருந்தனர். இன்னும் ஒரு வாரம் முழுவதும் இந்தப் பணி நடைபெறும் என அதிகாரிகள் தெரிவித்தனர். கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வீடுகளில் தனிமையில் இருப்பவர்கள், தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் இருக்கும் மக்களுக்கு தனிமை காலம் முடிந்தவுடன் அவர்கள் பகுதிக்குட்பட்ட ரேஷன் கடைகளில் வந்து நிவாரண தொகையை பெற்றுக்கொள்ளலாம் எனவும் அலுவலர்கள் தெரிவித்தனர்.
இதையும் படிங்க:ரெம்டெசிவிர் மருந்தை வாங்க அலைமோதும் மக்கள் கூட்டம்... விற்பனை தொடக்கம்!