தமிழ்நாட்டில் கரோனா பாதிப்பு சற்று குறைந்ததையடுத்து தொழில்களுக்குத் தளர்வு ஏற்பட்டதுடன் கடந்த 7ஆம் தேதி மாநிலம் முழுவதும் அரசு மதுபானக் கடைகளில் விற்பனை தொடங்கியது. 7ஆம் தேதி தொடங்கிய அரசு மதுபானக் கடை விற்பனை 8ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகளின் ஆணையால், ஊரடங்கு உத்தரவுக் காலம் முடியும் வரை உடனடியாக மூடப்பட்டது.
இதனைத் தொடர்ந்து 8ஆம் தேதி 4 மணியுடன் அரசு மதுபானக் கடையில் விற்பனை நிறுத்தப்பட்டது.
இதனைத் தொடர்ந்து மாநிலம் முழுவதுமுள்ள அரசு மதுபானக் கடைகளுக்குச் சீல் வைக்கப்பட்டது. மேலும் பாதுகாப்பில்லாத அரசு மதுபானக் கடைகளில் இருப்பு வைக்கப்பட்டிருந்த மதுபானப் பாட்டில்கள் இரவோடு இரவாக வேற்று இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இந்நிலையில் உயர் நீதிமன்றத்தின் உத்தரவுப்படி சீல் வைக்கப்பட்டதாகக் கூறிவிட்டு, ஈரோடு கருங்கல்பாளையம் அரசு மதுபானக் கடையில் சட்டவிரோதமாக தொடர்ந்து மது விற்பனை செய்யப்பட்டதாகப் புகார்கள் தெரிவிக்கப்பட்டன.
புகாரின் அடிப்படையில் அரசு மதுபானக் கடைகளின் மாவட்ட மேலாண்மை இயக்குநர் மற்றும் மதுவிலக்கு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் ஆகியோர் தலைமையில் 20-க்கும் மேற்பட்ட குழுவினர், அரசு மதுபானக் கடையில் திடீர் ஆய்வில் ஈடுபட்டனர். ஆய்வின் போது மாவட்டத்திலுள்ள ஏனைய அனைத்து அரசு மதுபானக் கடைகளுக்கும் சீல் வைக்கப்பட்டுள்ள நிலையில், இந்தக் கடைக்கு மட்டும் சீல் வைக்கப்படாதது ஏன் என்று கேள்வி எழுப்பப்பட்டது. மேலும் கடையில் இருப்பு வைக்கப்பட்டிருந்த மதுபானப் பாட்டில்களுக்கும் குறிப்பேட்டில் பதிவு செய்யப்பட்டுள்ள இருப்பு விவரமும் சரி பார்க்கப்பட்டது.