ஈரோடு மாவட்டம், கொடுமுடியில் அமைந்துள்ள கொடுமுடி மகுடேஸ்வரர் கோயில் இந்திய அளவில் பிரசித்தி பெற்ற கோயில்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. அதேபோல், கொடுமுடி அருகேயுள்ள வெங்கம்பூர் வரதராஜ பெருமாள் கோயிலும் முக்கியமான கோயிலாகக் கருதப்பட்டு வருகிறது.
இந்நிலையில், இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள இந்தக் கோயிலில் பணியாற்றிய செயல் அலுவலர் முத்துச்சாமி, போலி ரசீதுகள் அச்சடித்து இரண்டு கோயில்களிலும் பூஜை உள்ளிட்ட அனைத்து வகைகளிலும் 3 கோடி ரூபாய் வரை வசூல் செய்து அத்தொகையை கையாடல் செய்துவிட்டதாகப் புகார் கூறப்பட்டது.
அதனடிப்படையில், இந்துசமய அறநிலையத்துறையின் ஆணையர் உத்தரவின் பேரில் விசாரணை நடைபெற்று வருகிறது.
இதனிடையே, கோயிலில் நடைபெற்ற கையாடல் குறித்த விசாரணையைத் துரிதப்படுத்திட வேண்டும் என்பதை வலியுறுத்தி ஈரோடு தெற்கு மாவட்ட பாஜக கட்சியினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனுக்களை வழங்கினர்.