ஈரோடு மாவட்டம் பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை போக்குவரத்துத் துறையின்கீழ் செயல்பட்டுவந்தது. இந்நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாடு அரசின் சுகாதாரத் துறையின்கீழ் இந்த அரசு மருத்துவக் கல்லூரியை மருத்துவமனையாக மாற்ற தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது.
ஆனால் அரசு மருத்துவக் கல்லூரியில் வசூலிக்கும் 13 ஆயிரத்து 610 ரூபாய் கல்விக் கட்டணத்தைவிட, தனியார் மருத்துவக் கல்லூரியில் இருக்கும் நான்கு லட்சம் ரூபாய் கட்டணத்தைப் போன்று பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரியில் வசூலிக்கப்பட்டுவந்தது.
இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து மாணவர்கள், பெற்றோர்கள் எனத் தமிழ்நாடு அரசிடமும், மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை கோரிக்கைவிடுத்தும் கல்விக் கட்டணத்தை தமிழ்நாடு அரசு குறைக்காததன் காரணமாக 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கடந்த 15 நாள்களாக வகுப்புகளைப் புறக்கணித்து தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுவந்தனர்.