ஈரோட்டில் 16 வயது சிறுமியிடம் கருமுட்டை பெற்ற விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதில் தொடர்புடைய சிறுமியின் தாய், அவரது 2-வது கணவர், புரோக்கர் , ஆதார் அடையாளங்களை போலியாக தயாரித்து வழங்கிய நபர் ஆகிய 4 பேரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த விவகாரம் தொடர்பாக, மருத்துவக்குழுவினர் அளித்த அறிக்கையின் அடிப்படையில் தமிழ்நாடு அரசு, கருமுட்டை பெற்ற மருத்துவமனைகளுக்குச் சீல் வைக்க உத்தரவிட்டது.
இதனைத்தொடர்ந்து மருத்துவக்குழுவினர், வருவாய்த்துறையினர் மருத்துவமனைக்குச் சீல் வைத்தனர். இதனை எதிர்த்து மருத்துவமனை தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தனி நீதிபதி அமர்வில் மேல்முறையீடு செய்யப்பட்ட நிலையில், வழக்கை விசாரித்த தனி நீதிபதி மருத்துவமனைகளுக்கு வைத்த சீலை அகற்ற நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து தமிழ்நாடு அரசு, சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் மேல்முறையீடு செய்தது.