ஈரோடு: சத்தியமங்கலம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மல்லிகை, சம்பங்கி உள்ளிட்ட மலர்கள் சாகுபடி செய்யப்படுகிறது. இங்கு விளையும் பூக்கள் கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களுக்கும், கர்நாடகா, கேரளா, ஆந்திரா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
அமாவாசையில் பூ விவசாயிகளின் வாழ்வில் வெளிச்சம். - Sathyamangalam flower market
அமாவாசையை முன்னிட்டு சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில் மல்லிகை, சம்பங்கி பூக்கள் விலை கிடுகிடுவென உயர்ந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கரோனா தொற்று காரணமாக பொது முடக்கம் அமலில் இருந்த காரணத்தினால் கடந்த இரண்டு மாதங்களாக பூக்கள் விற்பனை ஆகாததால் விவசாயிகள் மிகுந்த நஷ்டத்திற்கு உள்ளாகினர். இந்நிலையில் ஜூலை 5ஆம் தேதி முதல் சத்தியமங்கலம் பூ மார்கெட் திறக்கப்பட்டு வழக்கம்போல் பூக்கள் விற்பனை நடைபெற்றுவந்த நிலையில் மல்லிகை, சம்பங்கி பூக்கள் எதிர்பார்த்த விலைக்கு விற்பனை ஆகவில்லை.
இன்று அமாவாசை தினத்தை முன்னிட்டு பூக்களின் தேவை அதிகரித்த காரணத்தால் சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில் மல்லிகை, சம்பங்கி பூக்கள் நல்ல விலைக்கு விற்பனை ஆனது. நேற்று கிலோ 120 ரூபாய்க்கு விற்கப்பட்ட மல்லிகைப் பூ இன்று 450 ரூபாய்க்கும், கிலோ 10 ரூபாய்க்கு விற்கப்பட்ட சம்பங்கி பூ 60 ரூபாய்க்கும் விற்பனையானதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.