ஈரோடு:சத்தியமங்கலம் நகராட்சியில் உள்ள 27 வார்டுகளில் தெருநாய்கள் கூட்டம் கூட்டமாக சுற்றித் திரிந்தன. தெரு நாய்கள் சாலைகளில் செல்வோரை துரத்துவது, கடிப்பது, வாகனத்தின் குறுக்கே சென்று விபத்து ஏற்படுத்துவது போன்ற செயல்களில் ஈடுபட்டதால் பொதுமக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகினர்.
இதையடுத்து சத்தியமங்கலம் நகராட்சிப் பகுதியில் சுற்றித் திரியும் தெருநாய்களைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என நகராட்சி நிர்வாகத்திடம் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதைத்தொடர்ந்து சத்தியமங்கலம் நகராட்சியின் மூலம் சம்பந்தப்பட்ட கால்நடைத்துறை அலுவலர்களின் அறிவுரையின் பேரில், இன்று (மே 04) நகர்ப் பகுதியில் சுற்றித்திரிந்த 100 தெரு நாய்களை பிடித்து வேனில் ஏற்றி மேட்டுப்பாளையத்திற்கு கொண்டு சென்று நாய்களுக்கு குடும்பக் கட்டுப்பாடு செய்யப்பட்டு பின்னர் நாய்கள் பிடிக்கப்பட்ட அதே பகுதியில் மீண்டும் கொண்டுவந்து விடப்பட்டது.