ஈரோடு: சத்தியமங்கலம் அடுத்த கடம்பூர் மலைப்பகுதியில் 100-க்கும் மேற்பட்ட மலைக் கிராமங்கள் உள்ளன. சத்தியமங்கலத்திலிருந்து 15 கிமீ தூரத்தில் உள்ள கடம்பூருக்கு குறுகலான வளைவுகள் கொண்ட மலைப்பாதை முக்கிய வழித்தடமாக உள்ளது.
மல்லியம்துர்க்கம் வனத்தில் பெய்த கனமழையின் காரணமாக மலை அருவிகளில் வெள்ளம் ஆர்ப்பரித்துக் கொட்டியது. தொடர்ந்து கொட்டிய மழைநீரால் இரண்டாவது கொண்டை ஊசி வளைவில் மண் அரிப்பு ஏற்பட்டதில் சாலையோரத்தில் இருந்த மரம் வேரோடு சாய்ந்து விழுந்தது.
மரம் சாலையின் குறுக்கே விழுந்ததில் கடம்பூர் சத்தியமங்கலம் இடையே வாகன போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டது. இதனால் இப்பகுதியில் பயணம் செய்த மக்கள் இரண்டு மணி நேரமாக அங்கேயே காத்திருந்தனர். 108 ஆம்புலன்ஸ், பேருந்துகள் என இவ்வழியில் பல வாகனங்கள் தொடர்ந்து பயணம் மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது.
தகவலறிந்து வந்த கடம்பூர் காவல் துறையினர், வனத் துறையினர் சாலையின் குறுக்கே விழுந்த மரத்தை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர். முதலில் சிறிய வாகனங்கள் செல்லும் அளவுக்கு வழித்தடத்தை ஏற்படுத்தும் முயற்சியில் வாகன ஓட்டிகளுடன் இணைந்து வனத் துறையினர் பணியாற்றுகின்றனர்.
இதையும் படிங்க:ஓடைகளில் வெள்ளப்பெருக்கு: போக்குவரத்து துண்டிப்பு