நீலகிரி மாவட்டத்தில் கனமழை பெய்துவருவதால் பில்லூர் அணைக்கு வரும் நீர்வரத்து அதிகரித்து, அணை அதன் முழு கொள்ளளவை எட்டியது. இதனால் பில்லூர் அணைக்கு வரும் உபரிநீர், காரமடை பள்ளம், கொடநாடு வெள்ளநீர் ஆகியவை மேட்டுப்பாளையம் பவானி ஆறு வழியாக பவானிசாகர் அணைக்கு வந்தது.
மாயாற்று நீரும் பவானிசாகர் அணைக்கு வருவதால் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து 12ஆயிரத்து 300 கன அடியாக நீடிக்கிறது. அணைக்குத் தொடர்ந்து வரும் நீர்வரத்தால் அணை 102 அடியை எட்டியது. 102 அடி உயரத்துக்கு அதிகமாக வரும் உபரிநீர், அணையின் மேல் மதகில் உள்ள 9 மிகைநீர்போக்கி வழியாக பவானி ஆற்றில் திறந்துவிடப்பட்டது.
தொடர்ந்து 12,300 கன அடி நீர் திறந்துவிடப்படுவதால் பவானி ஆறு கரைபுரண்டு ஓடுகிறது. கரைகளைத் தொட்டபடி வெள்ளநீர் செல்வதால் சத்தியமங்கலம் நகராட்சி ஆற்றங்கரையோரம் தாழ்வான பகுதியில் குடியிருப்போர், பாதுகாப்பான இடத்திற்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டனர்.
பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு! முன்னேற்பாடுகள் தீவிரம்! அணைத்து நீர் வரத்து அதிகமாக வரும் நிலையில் வருவாய், உள்ளாட்சி, நகராட்சி ஆகிய துறைகளுக்கு அவ்வப்போது தகவல் தெரிவிக்கப்பட்டு, பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. சத்தியமங்கலம் நகராட்சி ஆணையாளர் ஆர்.அமுதா, வருவாய் வட்டாட்சியர் எஸ்.ஜே.கணேசன் ஆகியோர் தலைமையில் வருவாய், நகராட்சி பணியாளர்கள் பவானி கரையோரம் உள்ள எஸ்.டி. பணிமனை சந்து, முனியப்பன் கோவில் வீதி, மத்திமரத்துறை ஆகிய பகுதியில் ஒலி பெருக்கி மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்தனர்.