ஈரோடு: அரியர் தேர்வை ரத்துசெய்து உத்தரவு பிறப்பித்த தமிழ்நாடு முதலமைச்சருக்கு பதாகைகள் வைத்து மாணவர்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.
கரோனா பரவலைக் கட்டுப்படுத்த தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இச்சூழலில் கரோனா தாக்கம் காரணமாக பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் மார்ச் மாதம் முதல் மூடப்பட்டன. இதன் காரணமாக நடைபெறவிருந்த தேர்வுகள் அனைத்தும் தள்ளிவைக்கப்பட்டு வந்தன.
இவ்வேளையில் மாணவர்கள் நலன் கருதி கலை மற்றும் அறிவியல் கல்லூரி, பல்தொழில்நுட்பக் கல்லூரி, பொறியியல் கல்லூரிகளில் இறுதி ஆண்டு பருவத்தேர்வு தவிர, பிற தேர்வுகள் அனைத்தையும் ரத்துசெய்து முதலமைச்சர் அறிவித்தார். இதைத் தொடர்ந்து அனைவரும் தேர்ச்சி என்றும் அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பு மாணவர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றது.
இதனைக் கொண்டாடும் விதமாக ஈரோடு மாவட்டம், கொல்லம்பாளையத்தில் திருக்குறளை மையப்படுத்தி தமிழ்நாடு முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்து கல்லூரி அரியர்மாணவர்கள் பதாகைகள் வைத்தனர். அதில், 'அரியர்மாணவர்களின் அரசனே, நீர் வாழ்க' என்று குறிப்பிடப்பட்டிருந்தது.