ஈரோடு அருகே வளையக்காரவீதி குப்பிபாளையம் பகுதியிலுள்ள வீடொன்றில் நியாய விலைக் கடையில் விநியோகிக்கப்படும் விலையில்லா அரிசி மூட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக ஈரோடு மாநகரக் காவல் துறையினருக்குத் தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் விசாரணை மேற்கொண்ட காவல் துறையினர் அப்பகுதியில் ஜெயந்தி என்பவரது வீட்டில் மூட்டை மூட்டையாக தமிழ்நாடு அரசின் விலையில்லா பச்சரிசி மூட்டைகள் பதுக்கி வைத்திருப்பதைக் கண்டறிந்தனர்.
இதனைத் தொடர்ந்து அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த இரண்டு டன் எடையளவு கொண்ட அரிசி மூட்டைகளைப் பறிமுதல்செய்த காவல் துறையினர் பதுக்கலுக்குக் காரணமான ஜெயந்தியுடன் விசாரணை மேற்கொண்டனர். பதுக்கல் அரிசி குறித்து முன்னுக்குப் பின் முரணான தகவலைத் தரவே ஜெயந்தியை கைதுசெய்து காவல்நிலையம் அழைத்து வந்தனர்.