கோயம்புத்தூர்: விமான நிலைய விரிவாக்கத்திற்கு நிலம் கையகப்படுத்துவது தொடர்பாக விவசாயிகளுடன் சட்டப்பேரவை தொகுதி உறுப்பினர் வானதி சீனிவாசன் கலந்துரையாடினார்.
அதில் நிலத்தை அளிப்பதில் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விவசாயிகள் வானதி சீனிவாசனிடம் எடுத்துரைத்தனர். இதனைத் தொடர்ந்து அதில் பெறப்பட்ட கோரிக்கையை வானதி சீனிவாசன் தமிழ்நாடு அரசுக்கு முன்வைத்துள்ளார்.
அவர் முன்வைத்த கோரிக்கையில், "இந்திய விமான நிலைய ஆணையம் (Airport authority of india) கோவை விமான நிலைய விரிவாக்கத்திற்கான வரைபடங்களை தயார் செய்தும், தேவையான நிலங்கள் இல்லாததால் அடுத்த கட்டப் பணிகளை தொடங்க முடியவில்லை.
தமிழ்நாடு அரசு நிலங்களை கையகப்படுத்தி தந்தால் தான் விமான நிலைய விரிவாக்கப் பணிகளை மேற்கொள்ள முடியும். நிலம் கையகப்படுத்துவதற்காக நில உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் கொடுக்கப்பட்டு, ஒருசிலர் பணம் பெற்றுள்ளனர்.
விவசாயப் பணிகள் நடைபெறாத அதிக அளவு நிலங்கள் இப்போதிருக்கும் விமான நிலையத்தின் தெற்குப் பகுதியில் உள்ளன. எனவே, மக்களுக்கு அதிகம் பாதிப்பு இல்லாமல் மாற்று இடங்களை கண்டறிந்து இந்தத் திட்டத்தை நிறைவேற்ற தமிழ்நாடு அரசு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.