கோவை: சூலூர் தொகுதியில் திமுக கூட்டணி சார்பாகப் போட்டியிடும் கொமதேக வேட்பாளர் பிரிமியர் செல்வத்தை ஆதரித்து திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பரப்புரை மேற்கொண்டார்.
'தைரியம் இருந்தால்...!' - மோடி, அமித் ஷாவுக்கு சவால்விடுத்த உதயநிதி - Udayanidhi Stalin criticizes Modi
'மோடிக்கு நான் சவால் விடுகிறேன். அவருக்குத் தைரியம் இருந்தால் மக்களை வேண்டாம், பத்திரிகையாளர்களைச் சந்திப்பாரா?' என்று பரப்புரையின்போது வினா தொடுத்த உதயநிதி, 'என்னுடைய சொத்து முழுவதும் அமித் ஷாவின் மகனுக்கு எழுதிவைக்கத் தயார். அவருடைய மகன் சொத்தை எனக்கு எழுதிவைக்கத் தயாரா, அதற்கு அவரிடம் தைரியம் உள்ளதா?' என்று சவாலும்விடுத்துள்ளார்.
கருமத்தம்பட்டி பகுதியில் நடைபெற்ற பரப்புரையில் பேசிய அவர், "மோடியையும் முதலமைச்சர் பழனிசாமியையும் செல்லாக்காசாகக் கசக்கி எறிவீர்களா? மோடி மதுரையில் நட்டுச்சென்ற எய்ம்ஸ் மருத்துவமனைக்கான செங்கல்லை எடுத்துவந்துள்ளேன். அதன் செலவு 75 கோடி ரூபாய். பாஜக, அதிமுக கூட்டணியை வீட்டிற்கு அனுப்புவதற்கான நேரம் வந்துவிட்டது.
கருணாநிதி, ஜெயலலிதா இருந்தவரை நீட் தேர்வு தமிழ்நாட்டிற்குள் நுழையவில்லை. அதற்குப்பின் வந்த முதலமைச்சர் பழனிசாமி நீட் தேர்வை தமிழ்நாட்டிற்குள் கொண்டுவந்தார். நீட் தேர்வால் 14 மாணவர்கள் தங்களது உயிரை மாய்த்துக்கொண்டனர். திமுக ஆட்சி அமைந்தவுடன் நீட் தேர்வை ரத்துசெய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.