தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்துகொண்ட நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து புறக்கணிப்பு! - தமிழ்த்தாய் வாழ்த்து

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்துகொண்ட ’ஸ்டார்ட் அப் அகாடமி’ சார்பில் தமிழ்நாட்டின் சிறந்த சுயதொழில் நிறுவனங்களுக்குப் பாராட்டு விழா நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து புறக்கணிக்கப்பட்டு, தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலுக்குப் பதிலாக கணபதி பாடல் பாடப்பட்டதால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்துகொண்ட நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து புறக்கணிப்பு!

By

Published : May 9, 2022, 4:19 PM IST

கோயம்புத்தூர்: அவினாசி சாலையில் உள்ள தனியார் ஹோட்டலில் ’ஸ்டார்ட் அப் அகாடமி’ சார்பில் தமிழ்நாட்டின் சிறந்த சுயதொழில் நிறுவனங்களுக்குப் பாராட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு சிறந்த சுயதொழில் முனைவோருக்கு விருதுகளை வழங்கினார்.

விழாவில் தொழில் அமைப்புகளின் நிர்வாகிகள், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, கோவை தெற்கு எம்எல்ஏ வானதி சீனிவாசன் உள்ளிட்ட பாஜக நிர்வாகிகளும் பங்கேற்றனர். விருதுகளை வழங்கிய பின்னர் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசுகையில்,’கோவையில் புதிய தொழில்முனைவோர் உருவாவது அதிகரித்து வருகின்றது. சுதந்திரம் கிடைத்தது முதலே உற்பத்தித்தொழிலுக்கு ஊக்கம் அளிக்கப்பட்டு வருகிறது.

கர்நாடகாவில் தேர்வு செய்யப்பட்ட எம்.பி என்றாலும் ’ஸ்டார்ட் அப்’ குறித்து சில விடயங்கள் சொல்ல விரும்புகின்றேன். பாஜகவும் மோடியும் தொழில்துறைக்கு என்ன செய்தார்கள் என்று கேட்கலாம்.

நிறைய உற்பத்தி செய்ய தொழில் நிறுவனங்கள் விரும்பினாலும் முன்பு இருந்த அரசு அதற்குவிடவில்லை. அளவோடு உற்பத்தி செய்ய மட்டுமே அனுமதித்து இருந்தது. சோசலிசம் பாணியில் இருந்து திட்டமிட்ட நிலையில், பெரிய தொழில்கள் இருந்தாலும் முன்னேற முடியவில்லை. இதை ஜனசங்க காலம் முதலே விமர்சித்து வந்திருக்கின்றோம்.

தற்போது நம் உற்பத்தி முறைகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து தொழில்களில் உற்பத்தியை அதிகரிக்க கொள்கை மாறுதல்களை செய்தது பிரதமர் மோடி அரசு. 2021 பட்ஜெட்டில் பொதுத்துறை நிறுவனங்களுக்கு என தனியாக இடம் கிடையாது என அறிவிக்கபட்டது. நாட்டுநலனுக்காக சில இடங்களில் பொதுத்துறை நிறுவனங்கள் இருக்கும்.

அனைத்து இடங்களிலும் பொதுத்துறைக்கு நிகராக தனியார் துறைகள் வளர்ச்சி: மற்றபடி பொதுத்துறை இருக்கும் எல்லா இடங்களிலும் தனியார் துறை அனுமதிக்கப்பட்டுள்ளது. அணு, விண்வெளி ஆராய்ச்சியில் கூட தனியார் பங்களிப்பு அனுமதிக்கப்பட்டுள்ளது. தேசிய பாதுகாப்பு தொடர்புடைய விவகாரங்களைத் தவிர, தனியாருக்கு எங்கு வாய்ப்பு கிடைக்கின்றதோ அங்கு தேவையானதை தொலைநோக்கு பார்வையுடன் இந்த அரசு செய்து வருகின்றது. சின்ன சின்ன தொழில்கள் நாட்டின் முதுகெலும்பாக இருக்கின்றன. 2015இல் பிரதமர் புதிய தொழில் முனைவோருக்கான எளிமையான முறைகளை உருவாக்கியுள்ளார்.

தற்போது நாம் வெப் 3 யுகத்தில் இருக்கிறோம். அதற்கேற்ப ’ஸ்டார்ட் அப்’களில் புதியவர்கள் ஆர்வம் செலுத்த வேண்டும். கோவை ஸ்டார்ட் அப் துறையில் முன்னோடியாக இருக்க வேண்டும். இந்தியாவும், ஜெர்மனியும் ஸ்டார்ட் அப்பில் ஒன்றாக இருந்த நிலையில், தற்போது இந்திய தொழில்களை ஜெர்மனி உற்றுகவனிக்கத் தொடங்கியுள்ளது. பின்டெக் ஸ்டார்ட்அப் துறையில் இந்தியா முன்னோடியாக இருக்கின்றது. அடுத்த ஆண்டு சிறுதானிய ஆண்டாக கொண்டாட உள்ளோம். அதன் உற்பத்தியை அதிகரிக்க தொழில்நுட்பங்களை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்’ எனத் தெரிவித்தார்.

தனியார் சார்பில் நடத்தப்பட்ட இந்த விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து புறக்கணிக்கப்பட்டு, விழா தொடக்கத்தின் போது கணபதி பாடலும், நிகழ்ச்சிக்குப் பின்னர் தேசிய கீதமும் பாடப்பட்டது. மத்திய நிதி அமைச்சரும், சட்டப்பேரவை உறுப்பினரும் கலந்து கொண்ட தனியார் விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து புறக்கணிக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:கோவையில் தண்ணீர் பஞ்சம் ஏற்படாமல் இருக்க நடவடிக்கை- அமைச்சர் கே.என். நேரு

ABOUT THE AUTHOR

...view details