கோயம்புத்தூர்:அரசு மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள மன அழுத்தத்திற்கான அதிதீவிர சிகிச்சைப்பிரிவை அமைச்சர் மா.சுப்ரமணியன் தொடங்கி வைத்தார். மேலும் அங்கு அமைக்கப்பட்டுள்ள புதிய இருதய தீவிர சிகிச்சை பிரிவு மற்றும் குழந்தைகளுக்கான அதி தீவிர சிகிச்சை பிரிவு உட்பட 110 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் ஜெய்கா கட்டுமான பணிகளை ஆய்வு செய்தார். அதனை தொடர்ந்து 200 பேருக்கு இலவச கண் கண்ணாடிகளை வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளில் 2,099 படுக்கைகள் கொண்ட அதிதீவிர சிகிச்சை பிரிவுகள் முதலமைச்சரால் தொடங்கி வைக்கப்பட்ட நிலையில், கோவை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் 32 படுக்கைகளுடன் கூடிய அதி தீவிர சிகிச்சை பிரிவு இன்று பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
இதில் அனைத்து வசதிகளுடனான நவீன உபகரணங்களை கொண்ட சிகிச்சை பிரிவு உள்ளதால் நோயாளிகளுக்கு மிகுந்த பயன் தரும். சிஎஸ்ஆர் நிதியில் 12 படுக்கைகள் கொண்ட தனி தீவிர சிகிச்சை பிரிவில் தற்கொலை முயற்சி செய்யும் நபர்களுக்கு தனி சிகிச்சை பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. மேலும் கோவை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் 110 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஜெய்கா நிதியில் கட்டப்படும் கூடுதல் கட்டட பணிகள் இவ்வாண்டு இறுதிக்குள் முடிவடைய உள்ளது. வெஸ்ட்னைல் வைரஸ் பாதிப்பு கேரளாவில் ஒருவருக்கு மட்டும் ஏற்பட்டுள்ளது.