கோயம்புத்தூர் மாவட்டம் மதுக்கரை, காந்திநகரை சேர்ந்த சிவராமன் (18) என்பவர் கோவைப்புதூரில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்சி. ஐ.டி. முதலாம் ஆண்டு படித்து வந்தார்.
இதனிடையே, இவர் அக்.10ஆம் தேதி இரவு தனது செல்போனுக்கு சார்ஜ் போட்டுவிட்டு படுக்கைக்கு அருகில் வைத்துள்ளார். இதையடுத்து அதிகாலை செல்போன் வெப்பமடைந்து வெடித்துள்ளது.
இதில் அவருக்கு உடலில் பல்வேறு பகுதிகளில் தீக்காயம் ஏற்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். 7 நாள்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று உயிரிழந்தார்.
இதேபோல் உலகம் முழுவதும் அடிக்கடி பல உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. எனவே போன் வெடிக்காமல் தவிர்ப்பதற்காக பின்வரும் வழிமுறைகளை பின்பற்றுங்கள்.
போனுக்கான சார்ஜர்:
செல்போன்களில் வெடிக்கக்கூடியது பேட்டரி மட்டுமே. இதனால்தான் ஆபத்தே. இதற்கு முக்கிய காரணம் போனுக்கான சார்ஜரை பயன்படுத்தாமல், வேறு செல்போன் சார்ஜர்களை பயன்படுத்துவதாகும். ஒவ்வொரு போனும் தனிப்பட்ட பேட்டரி திறனுடன் தயாரிக்கப்படுகின்றன. எனவே விபத்தை தவிர்க்க உங்களுடைய போனுக்கான சார்ஜரை மட்டும் பயன்படுத்துங்கள்.
தரமற்ற சார்ஜர்
ஒரு போனின் ஒரிஜினல் சார்ஜர்களை பயன்படுத்தும் போது, பேட்டரியின் வெப்பநிலை சீராக இருக்கும். ஆனால், குறைந்த திறன் கொண்ட பேட்டரிக்கு, அதிக வோல்ட் கொண்ட சார்ஜர் அல்லது குறைந்த விலையில் கிடைக்கூடிய தரமற்ற சார்ஜர் பயன்படுத்தினால் வெப்பம் அதிகரிக்கும் . இதனால் விபத்துகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். எனவே தரமற்ற மலிவு விலை சார்ஜரை தவிர்ப்பது நல்லது.
நீண்ட நேரம் சார்ஜ் போடுவது
பொதுவாக சில மணி நேரங்கள் மட்டுமே போனுக்கு சார்ஜ் போடவேண்டும். தற்போது விற்பனையாகும் போன்கள் அரை மணி முதல் ஒரு மணி நேரத்திலேயே முழு சார்ஜ் ஆகிவிடுகின்றன. இந்த நேரம் பழைய போன்களில் மாறுபடலாம். பொதுவாக அனைத்து போன்களிலும் 2 முதல் 4 மணி நேரங்கள் மட்டுமே சார்ஜ் போட வேண்டும்.
ஆனால், பலர் இரவு தூங்கும் போது சார்ஜ் போட்டுவிட்டு காலை வரை எடுப்பதில்லை. இந்த நேரத்தில் பேட்டரி அதிக வெப்பம் அடைந்து வெடிக்ககூடிய நிலைக்கு தள்ளப்படுகிறது. எனவே சார்ஜ் போடும் நேரத்தை கவனத்தில் கொள்ள வேண்டும்.
சார்ஜ் போட்டு பேசுவது:
சார்ஜ் போட்டு பேசினால் போன் வெடிக்கும். சார்ஜ் போட்டு அழைப்புகளை பேசுவதால், செல்போனிற்கு கூடுதல் சிக்னல் தேவைப்படுகிறது. அதனால் சார்ஜர் மூலம் பாயும் வோல்ட் அளவில் மாறுதல் ஏற்படுகின்றது. இதன்மூலம் பேட்டரி வெப்பமடைந்து வெடிக்கிறது. எனவே சார்ஜ் போட்டு பேசுவதை தவிருங்கள்.
இதையும் படிங்க:செல்போன் வெடித்து கல்லூரி மாணவன் உயிரிழப்பு