திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த ஆலாங்குப்பம் பாலாற்றில் நள்ளிரவில் அனுமதியின்றி மணல் கடத்துவதாக பொதுமக்கள், தன்னார்வலர்கள் மாவட்ட ஆட்சியர் சிவனருளுக்கு புகார் அளித்துள்ளனர்.
இந்நிலையில், மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் ஆம்பூர் வட்டாட்சியர் பத்மநாபன் தலைமையிலான வருவாய்த்துறையினர் கடந்த இரண்டு நாள்களாக மின்னூர், ஆலாங்குப்பம் பாலாற்று பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.
அலுவலர்கள் வருவதை முன்கூட்டியே சில அலுவலர்கள் மூலம் தகவல் பரிமாறுவதை அறிந்த வட்டாட்சியர் நேற்று தனியாக இருசக்கர வாகனத்தில் தலைக் கவசம் அணிந்து பாலாற்று பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளார்.
அப்போது, அவ்வழியாக மணல் கடத்தி வந்த ஆம்பூர் சான்றோர்குப்பம் பகுதியை சேர்ந்த மஞ்சுநாதன் என்பவருக்கு சொந்தமான ட்ராக்டர், ஆலாங்குப்பம் நடுத்தெரு பகுதியைச் சேர்ந்த விக்னேஷ் மற்றும் ராஜேஷ் என்பவருக்கு சொந்தமான 2 மாட்டு வண்டிகள் பறிமுதல் செய்தார்.
அதேபோல், பெரியவரிக்கம் பகுதியைச் சேர்ந்த துரை, இன்பநாதன், முரளி, ராஜேஷ் ஆகியோருக்கு சொந்தமான ஆறு மாட்டு வண்டிகளையும் வட்டாட்சியர் பத்மநாபன் பறிமுதல் செய்து நடவடிக்கை மேற்கொண்டார்.
இதனிடையே, மணல் கடத்தல் கும்பல் வட்டாட்சியரை முற்றுகையிட்டதால் சிறிது நேரம் அசாதாரண சூழ்நிலை ஏற்பட்டுள்ளது