கரோனா வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கையாக, ஊரடங்கு அமலில் இருந்ததால், ரயில் சேவை முற்றிலுமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அதில் வடமாநிலத்தவர்கள், அவர்களது சொந்த ஊருக்குத் திரும்ப சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வந்தன.
இந்நிலையில் இன்று (ஜுன் 1) முதல் அனைத்து மக்களுக்கும் ரயில் சேவைகள் தொடங்கப்பட்டன. அதில் சில கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டு தொடங்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் கோவை ரயில் நிலையத்தில் இருந்து, காட்பாடி பகுதிக்கு முதல் ரயில் இயக்கப்பட்டது.
இந்த ரயிலானது ஈரோடு சேலம் வழியாக காட்பாடி சென்றடைகிறது. இந்த ரயிலில் பயணம் செய்ய கோவையிலிருந்து 183 பேர் பதிவு செய்திருந்த நிலையில், 117 பயணிகள் மட்டுமே வருகை தந்திருந்தனர்.
அதே சமயத்தில் கோவையில் இருந்து திருச்சி வழியாக செல்லும் ஜனசதாப்தி விரைவு ரயிலும் இன்று(ஜுன் 1) முதல் இயக்கப்படுகிறது. இந்த ரயிலில் பயணிக்கும் பயணிகள் அனைவருக்கும் வெப்பமானி கொண்டு பரிசோதனை செய்யப்பட்ட பின்னரே, ரயிலில் பயணிக்க ரயில்வே நிர்வாகம் அனுமதிக்கிறது.
அதேபோன்று, ரயில்களில் தகுந்த இடைவெளியைப் பின்பற்றி அமரும் படியும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.