தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

கனமழையால் கோவை ரயில்வே பார்சல் கட்டடம் இடிந்து விபத்து - இருவர் பலி - விபத்தில் இருவர் பலி

கோவை: தொடர் கனமழையால் கோவை ரயில் நிலையத்தில் உள்ள பார்சல் அலுவலக கட்டடம் இடிந்ததில் இருவர் உயிரிழந்தனர்.

building collapse

By

Published : Aug 8, 2019, 12:53 PM IST

கோவை ரயில் நிலையத்தின் பின்புறம் கூட்ஸ் ரோட்டில் ரயில்வே பார்சல் அலுவலகம் உள்ளது. ரயில்வேக்கு சொந்தமான இந்தக் கட்டடத்தில் இருசக்கர வாகனம் பார்சல் செய்யும் இடம் மற்றும் பொருட்கள் வைக்கும் இடம் ஆகியவை செயல்பட்டு வந்தன. இந்நிலையில், இன்று அதிகாலை 3.30 மணி அளவில் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்தது.

அப்போது திடீரென ரயில்வே பார்சல் அலுவலக கட்டடம் இடிந்து விழுந்தது. இதனையடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற தீயணைப்பு துறையினர் ரயில்வே காவல் துறையினருடன் இணைந்து இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

ரயில்வே பார்சல் கட்டடம் இடிந்து விபத்து

அப்போது ஒப்பந்த பணியாளர்கள் பவிழம்மணி, இப்ராகிம், வடமாநில தொழிலாளி ஒருவர் உள்ளிட்ட மூன்று பேரை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனிடையே கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்ட இப்ராஹிம், பவிழம்மணி ஆகிய இருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

படுகாயமடைந்த வடமாநில தொழிலாளி ஒருவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இடிபாடுகளில் வேறு யாரேனும் சிக்கி உள்ளனரா என்பது குறித்து தீயணைப்பு துறையினர் ஆய்வு நடத்தி வருகின்றனர். இதனைத் தொடர்ந்து இடிபாடுகளை அகற்றும் பணியை தீயணைப்புத்துறை அலுவலர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர் மழை மற்றும் பலத்த காற்று காரணமாக இந்த விபத்து நடைபெற்றதாக மாவட்ட தீயணைப்பு துறை அலுவலர் பாலசுப்ரமணியம் தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details