கோயம்புத்தூர்: கரோனா இரண்டாவது அலை பாதிப்பு தமிழ்நாட்டில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக அனைத்து தொழில்களும் முடங்கியுள்ளன. கடந்த சில நாள்களாக கரோனா தொற்றின் தாக்கம் தமிழ்நாட்டில் குறைந்து வரும் நிலையில், அரசு சில தளர்வுகளை அறிவித்துள்ளது.
ஆன்லைன் வகுப்புக்கு முழு கட்டணம்
இதில், கரோனா காரணமாக கடந்த ஆண்டும் இந்த ஆண்டும் பள்ளி மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்ட நிலையில் மாணவர்களுக்கு அடுத்த ஆண்டுக்கான வகுப்புகள் தற்போது தொடங்கியுள்ளன. தனியார் பள்ளிகள் ஆன்லைன் மூலம் வகுப்பு ஆரம்பித்து, முழுமையான கல்விக் கட்டணம் செலுத்த வேண்டும் என பெற்றோர்களிடம் சில பள்ளிகள் தெரிவித்துள்ளன.
பெற்றோர்களின் குமுறல்
இதனால் வருமானமின்றி, பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளதால், தங்களால் முழு கல்விக் கட்டணத்தையும் உடனடியாக செலுத்த இயலாது என்பதே பெற்றோர்களின் மனக்குமுறலாக உள்ளது.
தனியார் பள்ளிகள் கட்டணம் வசூலிப்பது குறித்து பெற்றோர்களின் குமுறல் கடந்த ஆண்டும் இந்த ஆண்டும் கரோனாவால் பொருளாதார ரீதியாக குடும்பங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள சூழலில், தங்களுடைய பிள்ளைகளின் பள்ளிக் கட்டணத்தை முழுமையாக செலுத்த வேண்டும் என பள்ளி நிர்வாகத்தினர் கூறுகின்றனர்.
பணம் செலுத்திய பின் லிங்க்
இதில், சில பள்ளிகள் கல்விக் கட்டணம் செலுத்தினால் மட்டுமே ஆன்லைன் வகுப்புகளுக்கான லிங்க் அனுப்பப்படும் என மிரட்டுவதாகவும், இதனால் தங்கள் குழந்தைகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது எனவும் பெற்றோர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.
இது குறித்து, தமிழ்நாடு அரசு உடனடியாக தலையிட்டு, தனிக் குழு ஒன்றை அமைத்து தனியார் பள்ளி கல்விக் கட்டணம் வசூலிப்பதை கண்காணிக்க வேண்டும். அதேபோல், அரசு நிர்ணயித்த தொகையை பள்ளிகள் வசூலிப்பதையும் முறைப்படுத்த வேண்டும் என பெற்றோர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
நாள்தோறும் வேலைக்குச் சென்றால் மட்டுமே குடும்பத்திற்குத் தேவையான அத்தியாவசியப் பொருள்களை வாங்க முடியும் என்ற இந்தச் சூழலில், முழுமையான கல்விக் கட்டணம் என்பது குழந்தைகளின் எதிர்காலத்தையே பாதிக்கும்.
பெற்றோர்களின் இந்தக் கோரிக்கையை நிறைவேற்றவும், குழந்தைகளின் எதிர்காலத்தை கருத்தில்கொண்டும் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே கல்வியாளர்களின் வேண்டுகோளாக உள்ளது.
இதையும் படிங்க: கல்லூரிகள் திறப்பு எப்போது ? - உயர்கல்வித்துறை அமைச்சர் நாளை ஆலோசனை