பொள்ளாச்சியில் இளம்பெண்களை பாலியல் துன்புறுத்தல் செய்து, ஆபாச படம் எடுத்த கும்பல் சமீபத்தில் கைதாகியது. இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியையும், கொதிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. சிபிசிஐடிக்கு மாற்றப்பட்ட இந்த வழக்கு விசாரணை தற்போது சிபிஐக்கு மாற்றப்பட்டுள்ளது.
பொள்ளாச்சி விவகாரம்: தமிழகத்தில் தொடரும் மாணவர்கள் போராட்டம் - பொள்ளாச்சி விவகாரம்
கோவை: பொள்ளாச்சி பாலியல் துன்புறுத்தல் சம்பவத்தில் கைதாகி இருப்பவர்களுக்கு கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கல்லூரி மாணவ-மாணவிகள் போராட்டம் இன்றும் தொடர்ந்து வருகிறது.
இதற்கிடையே கைதானவர்களை கடுமையாக தண்டிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது. அந்த வகையில் தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதியில் இருக்கும் கல்லூரி மாணவர் மற்றும் மாணவியர் தங்களது போராட்டத்தை நடத்தி வருகின்றனர். இதனையடுத்து இன்றும் போராட்டம் நடத்தப்படலாம் என்று பொள்ளாச்சியில் சில கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
இந்நிலையில், பொள்ளாச்சி பாலியல் துன்புறுத்தல் சம்பவத்தில் கைதாகி இருப்பவர்களை கடுமையாக தண்டிக்க வேண்டும் என தஞ்சை, கும்பகோணம், திருத்துறைப்பூண்டி உள்ளிட்ட தமிழகத்தின் ஏராளமான பகுதிகளை சேர்ந்த கல்லூரி மாணவர் மற்றும் மாணவிகளின் போராட்டம் இன்றும் தொடர்ந்து வருகிறது.