கோவை மாவட்டத்தில் தென்கயிலை என்று அழைக்கப்படும் வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயில் மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளது. இந்த கோயிலிலிருந்து 6 மலைகளைக் கடந்து ஏழாவது மலையில் உள்ள சுயம்பு வெள்ளியங்கிரி ஆண்டவரை தரிசிக்க பக்தர்கள் ஆண்டுதோறும் ஆன்மீக பயணம் மேற்கொள்வது வழக்கம்.
கடல்மட்டத்திலிருந்து 6 ஆயிரம் அடி உயரத்தில், கிரிமலையில் வெள்ளியங்கிரி ஆண்டவர் பஞ்சலிங்கேஸ்வரராக எழுந்தருளியுள்ளார், சிவராத்திரி மற்றும் சித்ரா பவுர்ணமியன்று இங்கு சாமி தரிசனம் செய்ய லட்சக்கணக்கான பக்தர்கள் வருவது வழக்கம். தமிழ்நாடு மட்டுமின்றி அண்டை மாநிலங்களிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக மலையேற்றத்திற்கு வருகின்றனர்.
வெள்ளை விநாயகர் மலை, பாம்பாட்டி மலை, கைத்தட்டி மலை, ஒட்டர் சமாதி மலை, பீமன் களி உருண்டை, ஆண்டி சுனை, ஆகிய ஆறு மலைகளைக் கடந்து ஏழாவது மலையான கிரி மலையின் உச்சியில் குகையில் சுயம்பு லிங்கமாக வெள்ளியங்கிரி ஆண்டவர் எழுந்தருளியுள்ளார்.
ஆண்டுதோறும் பிப்ரவரி மாதம் முதல் மே மாதம்வரை நான்கு மாதங்களுக்கு மட்டுமே பக்தர்கள் செல்ல வனத்துறையினர் அனுமதித்து வரும் சூழலில் இந்த ஆண்டுக்கான மலையேற்றத்திற்கு வனத்துறையினர் இன்று முதல் அனுமதி வழங்கியுள்ளனர். காலை 5.30 மணியளவில் பக்தர்கள் தங்களுடைய மலையேற்றத்தை தொடங்கியுள்ளனர். கிரி மலையில் உள்ள வெள்ளியங்கிரி ஆண்டவரை தரிசிக்க இன்று நூற்றுக்கணக்கான பக்தர்கள் மலையேறி சென்றுள்ளனர்.