சென்னை:கோவையில் பாஜக, ஆர்எஸ்எஸ், இந்து முன்னணியினரின் அலுவலகம், வீடுகள் என 7 இடங்களில் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டன. இதனால் கோவை மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் பாதுகாப்புகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அதைத்தொடர்ந்து, சென்னை உள்பட தமிழ்நாட்டின் அனைத்து முக்கிய ரயில் நிலையங்களிலும் இன்று (செப்.24) ரயில்வே போலீசார் பாதுகாப்பை பாலப்படுத்தியுள்ளனர்.
குறிப்பாக, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் உள்ள நடைமேடைகளுக்கு வரும் அனைத்து ரயில்களிலும் ரயில்வே போலீசார் மோப்ப நாய் உதவியுடன் தீவிர சோதனை நடத்தி, ரயில் நிலையங்களுக்கு வரும் பயணிகளின் உடமைகளை சோதனைக்கு உட்படுத்தி வருகின்றனர். சந்தேகிக்ககூடிய வகையில் யாரேனும் ரயில் நிலையங்களில் வலம் வருகிறார்களா என்பதையும் சிசிடிவி மூலம் கண்காணித்து வருகின்றனர்.
இதனிடையேசென்ட்ரல் ரயில் நிலையத்தில் ரயில்வே எஸ்.பி அதிவீர பாண்டியன் ஆய்வு மேற்கொண்டார். அதன்பின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர், 'ரயில் மூலம் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் கடத்தல் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் சந்தேகத்திற்கிடமான நபர்களை பிடித்து அவர்களின் உடமைகளைத் தொடர்ந்து ரயில்வே போலீசார் சோதனை மேற்கொண்டு வருவதாகவும், ரயில் பெட்டிகளில் சந்தேகத்திற்கிடமான பொருட்கள் ஏதும் உள்ளதா? என்பதை கண்டறிய மோப்ப நாய் மற்றும் வெடிகுண்டு நிபுணர்களின் உதவியுடன் கண்காணிப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்படுள்ளதாகவும் தெரிவித்தார்.