கோவை:விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தலைமையில் நேற்று (அக்.8) நடந்த மணிவிழா பொதுக்கூட்டத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் பா.சிதம்பரம், அமைச்சர் செந்தில் பாலாஜி, மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா, தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் ஆகியோர் பங்கேற்று சிறப்புரை ஆற்றினர். விசிகவினர் திருமாவளவனுக்கு அன்பளிப்பாக தங்க நாணயங்கள் வழங்கப்பட்டன.
கூட்டத்தில் பேசியஅமைச்சர் செந்தில் பாலாஜி, 'திருமாவளவனின் திருமணம் விசிகவுடன் தான். இவரின் பிள்ளைகள் கட்சித் தொண்டர்களே. முதலமைச்சருக்கு நல்ல சகோதரராக உள்ளவர் திருமாவளவன். இவ்விருவருக்கும் இடையே நிறைய ஒற்றுமைகள் உள்ளன. அது வெறும் எண் மட்டும்தான், இவருக்கு 60 வயது என்றால் யாரேனும் நம்புவார்களா? இவருக்கு தாடி மட்டும்தான் வெளுத்துள்ளது. 18 வயதுடையவர் போல ஓடிக்கொண்டே தான் இருக்கிறார்.
ஒடுக்கப்பட்ட மக்களின் உரையாக சட்டப்பேரவையிலும், நாடாளுமன்றத்திலும் திகழ்கிறார். நோட்டாவுடன் போட்டி போடுபவர்கள் கோவையில் 100-க்கு பூஜ்ஜியம்; அரவக்குறிச்சியில் போட்டி போட்டார்கள் ரூ.1000 பணம் கொடுத்தார்கள். என்னை எதிர்த்து நின்றவரை மக்கள் கர்நாடகாவிற்கு திரும்பிப்போ.. என பதில் அளித்தனர். ஒரு பூத்துக்கு ஒரு ஆள் காட்ட முடியுமா? வெற்று விளம்பரத்தை சமூக வலைதளங்களை மட்டும் நம்பி அவதூறு பரப்பி வருகின்றனர்.
அனைவருக்குமான தலைவர் திருமா:சமூக வலைதளங்கள் எல்லாம் இப்போது ஓட்டாக மாறியதொடு, ஓட்டுக்காக உழைக்கவேண்டும். தமிழ்நாட்டைப் பார்த்து, ஒன்றியத்தில் ஆட்சியிலுள்ளவர்கள் வாக்குறுதிகளாக வழங்கி வருகின்றனர். அத்தோடு, வரும் நாடாளுமன்றத்தேர்தலில் 40-க்கு 40 நாம் வெற்றி பெறுவோம். நீலகிரி, பொள்ளாச்சி, கோவை நாடாளுமன்றத் தொகுதிகளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிக்கும் வேட்பாளர்களுக்குத்தான் வெற்றி. அனைத்து சமுதாயத்திற்கான கருத்துகளைப் பேசி வருபவரான, திருமாவின் சொல்லும் செயலும் நூறு ஆண்டு காலம் கடந்தும் நிமிர்ந்து நிற்கும்.
பாஜகவின் கடைசி தேர்தல்:அரசியல் பணிக்காக, அரசு பணியைத் துறந்த இவர் ஒருவேளை அப்பணியிலிருந்தால் ஓய்வு பெற்றிருப்பார். இந்த அரசியல் பணிக்காக தனது வாழ்நாளையே தியாகம் செய்தவர்தான், திருமா. அரசியல்வாதி, எழுத்தாளர், அரசு வேலை, நடிகர் என பன்முகம் கொண்டவரே திருமா. தமிழ்நாட்டில் வரும் நாடாளுமன்றத் தேர்தலே பாஜகவின் கடைசி தேர்தலாக அமையும்' என்றார்.
ஓபிசி இட ஒதுக்கீட்டுக்காக முதல் குரல்: தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் பேசுகையில், 'ஒடுக்கப்பட்ட சமூக மக்களுக்காக தோன்றிய தலைவர்தான் திருமாவளவன். அவமானங்களையும், அசிங்கங்களையும் கடந்து அரசியலில் உயர்ந்துள்ளார். திருமாவின் எழுத்தை வாசியுங்கள், திருமாவின் பேச்சை கேளுங்கள். ஓபிசி இட ஒதுக்கீட்டுக்காக முதலில் குரல் கொடுத்தவர் திருமா. பல சமுதாயங்களைச் சேர்ந்தவர்கள் திருமாவைப் பின் தொடர்கின்றனர்.
திருமாவிற்கு சல்யூட்:திருமாவை விட்டுவிட்டு எந்த அரசியல் மேடைகளும் இனி இருக்காது. 'அவாளும்' வருத்தப்படும் அளவிற்கு திருமாவின் வளர்ச்சி உள்ளது. நாடாளுமன்றத்தேர்தலில் திருமாவுடன் கைகோர்க்க ஆசைப்படுகிறார்கள். என்னுடைய முன்னாள் தலைவர் ஆசைப்படுகிறார். கத்தி, கம்பு எதையும் கையில் எடுக்காமல் அரசியலை ஒழுங்குபடுத்துகிறார் திருமா. சாதிய மிடுக்குடன் இருந்தவர்கள் இன்று திருமாவை பார்த்து சல்யூட் வைக்கும் நிலைக்கு உயர்ந்துள்ளார்' என்றார்.
அரியாசனத்தில் அமர்ந்த திருமா:முன்னாள் மத்திய அமைச்சர் பா.சிதம்பரம் பேசுகையில், 'பேராடி போராடி அனைத்து தடைகளையும் உடைத்து நாடாளுமன்றத்தில் அரியாசானம் போட்டு அமர்ந்துள்ளார். நூற்றாண்டு காலம் திருமா வாழ.. வாழ்த்துகிறேன். விசிகவின் தொண்டர்களுக்கான கோரிக்கை நான் சொல்வது திருமாவின் கொள்கைகளை கடைசி வரை பின்பற்ற வேண்டும். 75ஆண்டு கால சுதந்திர தினத்தை கொண்டாடுகிறோம். ஆனால், முழுமையாக 130 கோடி மக்களுக்கு சுதந்திரம் கிடைக்கவில்லை. பல பேர் பேசவும் எழுதவும், போராடவும் சுதந்திரம் இல்லை.
பல மாடி கட்டடம்-இந்து மதம்: உணவு, இருப்பிடம் போன்றவையிலும் சுதந்திரம் கிடைக்கவில்லை. பழங்குடியினர், சிறுபான்மையினருக்கு இன்னும் முழு சுதந்திரம் கிடைக்கவில்லை. அமெரிக்காவில் கறுப்பின மக்கள் 200ஆண்டுகளுக்கும் மேலாகப் போராடுகின்றனர். நம்முடைய நாட்டில் என்னுடைய வாழ்நாளுக்குப் பிறகும் இப்போராட்டம் இருக்கும். இந்தியா முழுவதும் விவாதம் நடைபெறுகிறது. அதை இந்த மேடையில் தவிர்க்க முடியாது. மனுஸ்மிருதியை எதிர்ப்பதாக அம்பேத்கர் அடித்துச்சொன்னார். அமெரிக்கா, லண்டன் உள்ளிட்ட உலக அரங்கிலும் உடைத்துச்சொன்னவர், அம்பேத்கர். இந்தியாவில் இருக்கக்கூடிய இந்து மதம் பல மாடி கட்டடம்.
காந்தியின் சனாதானத்தை ஏற்பதில்லை:ஆனால், ஒரு மாடியில் இருந்து இன்னொரு மாடிக்கு போக முடியாது. இதுபோன்ற வேறுபாடு எந்த மதத்திலும் கிடையாது. இந்தியாவில் இருக்கும் மத பேதங்கள் எந்நாட்டிலும் இல்லை. இதை உடைத்து எரிய வேண்டிதான் வாழ்நாள் முழுவதும் அம்பேத்கர் போராடினார். சனாதானத்தை ஆதரிப்பவர்களை எதிர்த்துப் போராட வேண்டும். அவர்கள் நமக்கான சவால். மகாத்மா காந்தி சனாதானத்தை பேசியதை நான் ஏற்கவில்லை; அதை அம்பேத்கரும் ஏற்கவில்லை. மகாத்மா காந்தி போன்ற ஒரு தலைவர் இல்லை. மனுஸ்மிருதி பற்றிய விவாதம் 80 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது.
பெரியார் உணவத்தை சூறையாடிய விவகாரம்:அண்ணாமலைக்கும், திமுக ராசாவிற்கு இடையே நடப்பது விவாதம் மட்டும் இல்லை. எல்லா மனிதருக்கும் ஒரே மாதிரியான மதிப்பு இன்னும் இந்தியாவில் கிடைக்கவில்லை. அது கிடைக்கும் வரைக்கும் இப்போராட்டம் தொடரும். கடந்த செப்.13 ஆம் தேதி பெரியார் உணவகத்தை எப்படி திறக்கலாம்? என கலவரத்தை நடத்தினர். இளைஞர்கள் பலர், காவிக் கொடியை தூக்கிக்கொண்டு செல்வது அறிந்தேன். உணவகத்தை அடித்து நொறுக்கியதை பார்த்து வேதனை அடைந்தேன்.
சாதியமும் சனாதானமும் ஒழிக: சனாதானத்தை ஏற்கிற இளைஞர்களைப் பார்த்து பரிதாபப்படுகிறேன். இந்த மண் திராவிடமும், தேசியமும் கலந்த மண் இது. ஆதிக்க உணர்வுகளையும், சக்திகளையும் அழிக்கப் போராட வேண்டும். காந்தியை மதிக்கிறேன்; ஆனால், சனாதானக் கருத்தை ஒருபோதும் ஏற்க மாட்டேன். ஏற்றத் தாழ்வைக் கடுமையாக எதிர்க்கிறேன். சாதி ஒழிந்தால்தான், சனாதானத்தை ஒழிக்க முடியும். சனாதானத்தை ஒழிக்கும் போராட்டத்தில் திருமாவின் தலைமையில் செல்லத் தயார்' எனத் தெரிவித்தார்.