கோவை: சாய்பாபா காலனி பகுதியைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் (24). இவர் 2018ஆம் ஆண்டு அப்பகுதியில் உள்ள 17 வயது சிறுமியை காதலித்து திருமண ஆசை வார்த்தை கூறி கர்ப்பமாக்கி உள்ளார்.
சிறுமி கர்ப்பமானது சிறுமியின் பெற்றோருக்கு தெரியவர, அவர்கள் கோவை மத்திய அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பாலசுப்பிரமணியன் மீது புகார் அளித்தனர்.
அதனைத் தொடர்ந்து பாலசுப்பிரமணியன் கைதுசெய்யப்பட்டு, கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த வழக்கு தொடர்பான விசாரணை, கோவை போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில், நேற்று (ஆக. 27) வழக்கை விசாரித்த போக்சோ நீதிமன்ற பொறுப்பு நீதிபதி ரவி, குற்றவாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனையும், 20 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.
மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ. 5 லட்சம் இழப்பீட்டை அரசு வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: '11ஆண்டுகள் தண்டனை அனுபவித்த பெண்: நிரபராதி என உயர் நீதிமன்றம் தீர்ப்பு'