கோவை:யூடியூபர் ஜிபி முத்துவுடன் டிடிஎஃப் வாசன் சென்ற பைக் ரைடிங் வீடியோ வைரலாகிய நிலையில், அவர் மீது வழக்கு பதியப்பட்டது. நேற்று நீதிமன்றத்தில் அவர் ஆஜரான நிலையில் அவருக்காக இருவர் அளித்த உத்தரவாதத்தின் பேரில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
கடந்த சில நாட்களுக்கு முன் பைக்கர் டிடிஎஃப் வாசன் என்பவர் யூடியூபர் ஜி.பி.முத்து என்பவரை இரு சக்கர வாகனத்தில் அமர வைத்தவாறு சுமார் 150 கி.மீ. வேகத்தில் வாகனத்தை ஓட்டிய வீடியோ ஒன்றை வெளியிட்டதைத் தொடர்ந்து போத்தனூர் மற்றும் சூலூர் போலீசார் டிடிஎஃப் வாசன் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
இந்திய தண்டனை சட்டத்தின் கீழ், பொது இடத்தில் அஜாக்கிரதையாக வாகனம் ஓட்டுதல், மோட்டார் வாகனச் சட்டத்தின்படி பில்லியன் ரைடர் ஹெல்மெட் அணியாதது, ஆபத்தை விளைவிக்கும் வகையில் வாகனம் ஓட்டுதல் ஆகிய 2 பிரிவு என மொத்தம் 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்த போலீசார் டிடிஎஃப் வாசனை தேடி வந்த நிலையில், நேற்று மதுக்கரை உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி சரவணன் முன்பு அவர் சரணடைந்தார்.
இதனையடுத்து நேற்று காலை 10.30 மணிக்கு சரணடைந்த வாசன், மாலை 5.30 வரை நீதிமன்ற கூண்டில் அமர்ந்திருந்தார். பின்னர் இரண்டு நபர்களின் உத்தரவாதம் கொடுத்த பின் மாலையில் அவர் இன்று (செப்.27) ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். போத்தனூர் வழக்கில் சரணடைந்த நிலையில், சூலூர் காவல் நிலையத்தில் பதியப்பட்ட வழக்கில் வருகின்ற வெள்ளிக்கிழமை டிடிஎஃப் வாசன் ஆஜராக இருப்பதாகக் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: ஜி.பி.முத்துவுடன் அசுர வேகத்தில் சென்ற டிடிஎஃப் வாசன் மீது வழக்குப்பதிவு