தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

தொழிலதிபரின் ஊழியர் மரணம்; வருமான வரித்துறை அலுவலர்களிடம் விசாரணை! - மாவட்ட குற்றப்பிரிவு துணைக் காவல் கண்காணிப்பாளர் ராஜாரணவீரன்

கோவை: உருமாண்டம்பாளையத்தில் தொழிலதிபர் ஊழியர் ஒருவரின் மர்மமான மரணம் குறித்து வருமான வரித்துறை அலுவலர்களிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

தொழிலதிபரின் ஊழியர் மரணம்

By

Published : Sep 14, 2019, 4:25 PM IST

கோவை துடியலூரை அடுத்த உருமாண்டம்பாளையத்தைச் சேர்ந்தவர் பழனிசாமி (48). இவர், கடந்த பல ஆண்டுகளாக கோவையைச் சேர்ந்த தொழிலதிபர் மார்ட்டின் என்பவருக்கு சொந்தமான நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வந்தார். அவரது உதவியாளராகவும் இருந்ததாக கூறப்படுகிறது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொழிலதிபர் மார்ட்டினுக்கு சொந்தமான நிறுவனங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். இந்த சோதனையின் போது பழனிசாமியிடமும் வருமான வரித்துறை அலுவலர்கள் விசாரணை நடத்தியுள்ளனர்.

இதனையடுத்து, கடந்த மே மாதம் 2ஆம் தேதி மேட்டுப்பாளையம் வெள்ளியங்காடு சுத்திகரிப்பு நிலையம் அருகேயுள்ள, குட்டையில் பழனிசாமி மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தார். இந்த சம்பவம் தொடர்பாக காரமடை காவல்துறையினர் விசாரித்தனர், அதன் பின்னர் மாவட்ட குற்றப்பிரிவு துணைக் காவல் கண்காணிப்பாளர் ராஜாரணவீரன் தலைமையில் இவ்வழக்கு தொடர்பாக 150க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டது.

இதற்கிடையே, பழனிசாமி உயிரிழப்பு விவகாரம் தொடர்பாக, தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தினர் விசாரணை நடத்தினர். இந்த வழக்கை கூடுதல் எஸ்.பி அந்தஸ்த்திலான அலுவலர்கள் விசாரிக்க வேண்டும் என அவர்கள் உத்தரவிட்டனர்.

இதை தொடர்ந்து, குழந்தைகள், பெண்களுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு கூடுதல் எஸ்.பி அனிதா தலைமையிலான காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். இந்நிலையில், பழனிசாமி உயிரிழப்பு விவகாரம் தொடர்பாக, வருமான வரித்துறை அலுவலர்கள் இரண்டு பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக மேலும் சில வருமான வரித்துறை அலுவலர்களிடம், காவல்துறையினர் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details