கோயம்புத்தூர்:அவிநாசி சாலையில் உள்ள தனியார் மண்டபத்தில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சார்பில் 'எண்ணியது எய்துவோம்' என்ற கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. கோயம்புத்தூர் மாவட்டத்தின் வளர்ச்சித் திட்டங்கள் குறித்த இந்தக் கலந்தாய்வுக் கூட்டத்தில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் எம்எல்ஏ ஈஸ்வரன் தலைமை தாங்கினார்.
இதில் தமிழ்நாடு மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். அவரிடம் 'எண்ணியது எழுதுவோம்' என்ற கோரிக்கை புத்தகம் வழங்கப்பட்டது.
ஸ்டாலின் கொடுத்த அசைன்மென்ட்
இதனையடுத்து, செய்தியாளரிடம் பேசிய ஈஸ்வரன், "கோயம்புத்தூர் மாவட்டத்தில் வளர்ச்சித் திட்டப் பணிகளை வேகப்படுத்த முதலமைச்சர் ஸ்டாலின், செந்தில்பாலாஜிக்கு பொறுப்பு கொடுத்து அனுப்பியுள்ளார். அதனை செவ்வனே செய்துவருகிறார்.
கோவையில் எம்எல்ஏ ஈஸ்வரன், அமைச்சர் செந்தில்பாலாஜி செய்தியாளர் சந்திப்பு கோயம்புத்தூர் மாவட்டம் 10 ஆண்டுகளாக வளர்ச்சித் திட்டப் பணிகளில் பின்தங்கியுள்ளது. அதனை முன்னெடுக்க கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் சார்பில் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில், 16 பக்கங்கள் அடங்கிய கோரிக்கை புத்தகம் செந்தில்பாலாஜியிடம் வழங்கப்பட்டுள்ளது.
தலைநகரம் பொள்ளாச்சி
கோயம்புத்தூர் மாவட்ட விமான நிலைய விரிவாக்கம் என்பது உடனடியாகச் செய்யப்பட வேண்டிய ஒன்று. இது, கோயம்புத்தூரின் வளர்ச்சிக்கு வித்திடும். இதன்மூலம், கோவையிலிருந்து நேரடியாக வெளிநாடுகளுக்கு பயணிக்க வாய்ப்பு உள்ளது. நேரடி ஏற்றுமதி இறக்குமதி வாய்ப்பு உள்ளது. இதனால் தொழில் வளர்ச்சி அடையும். இதுதான் முதலமைச்சரின் நோக்கம்.
அதுமட்டுமின்றி ஆனைமலை ஆறு நல்லாறு திட்டம் நிறைவேற்றப்பட வேண்டும். நொய்யல் நதியை சுத்தம் செய்யும் பணி மேற்கொள்ளப்பட வேண்டும். ஜவுளித் தொழிலைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், அதற்கு நூல் விலையைக் கட்டுப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளது.
'எண்ணியது எழுதுவோம்' என்ற 16 பக்க கோரிக்கை புத்தகத்தை வெளியிடும் அமைச்சர், கொமதேக ஈஸ்வரன் கோவை, அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் பொறியியல் தொழிற்சாலைகளைப் பாதுகாக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த வேண்டும். கோயம்புத்தூர் மாவட்டத்தை இரண்டாகப் பிரிக்க வேண்டிய அவசியம் உள்ளது பொள்ளாச்சியைத் தலைநகராகக் கொண்டு இன்னொரு மாவட்டம் வேண்டும். ரயில் நிலைய தேவைகளும் உள்ளன" எனத் தெரிவித்தார்.
ஏமாற்றிய முந்தைய ஆட்சி
அதனைத் தொடர்ந்து பேசிய செந்தில்பாலாஜி, "வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்தான 16 பக்க கோரிக்கைகள் என்னிடம் வழங்கப்பட்டுள்ளன. இந்தக் கோரிக்கைகள் முதலமைச்சரிடம் ஒப்படைக்கப்பட உள்ளன. கோவையில் 300 சாலைப் பணிகள் மேற்கொள்ளப்படாமல் உள்ளதாகக் குற்றஞ்சாட்டுபவர்கள், அந்தச் சாலைப் பணிகள் குறித்த பட்டியலை இரண்டு நாள்களுக்குள் வெளியிட வேண்டும்.
தேர்தல் காலங்களில் நிர்வாக அனுமதி பெறாமல் நிதி ஆதாரங்கள் இல்லாமல் மக்களை ஏமாற்ற அந்தச் சாலைப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. கடந்த ஆட்சியின்போது நிதி இல்லாமல் மேற்கொள்ளப்பட்ட பணிகளுக்கான தொகையைக் கேட்டு தற்பொழுதும் ஒப்பந்ததாரர்கள் காத்திருக்கின்றனர்" எனத் தெரிவித்தார்.
இந்தக் கலந்தாய்வுக் கூட்டத்தில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் முக்கியப் பிரமுகர்கள், கட்சியினர் பலர் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: குழந்தைக்கு 'சோழன்' என்று பெயர் வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்: திருவேற்காடு ஆய்வில் ருசிகரம்!