கோயம்புத்தூர்:கோவை குனியமுத்தூரில் உள்ள தனியார் மண்டபத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பாக, மகளிருக்கான மய்யம் விருதுகள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.
இதில் பல்வேறு துறைகளில் சாதித்த பெண்களுக்கு கமல்ஹாசன் விருதுகளை வழங்கிப் பாராட்டினார். பின்னர் விழாவில் பேசிய கமல்ஹாசன், 'உலகில் பெரிய மாற்றங்களைக் கொண்டு வந்தவர்கள் சாமானியர்கள். எனவே, மாற்றம் நம்மில் இருந்து தொடங்கவேண்டும். நாம் புலம்புவதால் பிரயோஜனம் ஒன்றும் இல்லை.
காந்தி வந்தவுடன் நம் நாட்டிற்கு சுதந்திரம் கிடைத்துவிடவில்லை. பொறுமையாக இருந்து தன் பணியை செய்து முடித்து விடுதலை வாங்கி கொடுத்துவிட்டுப்போனார். பார்வையாளர்கள் அனைவருமே மாற்றத்திற்கான விதைகள்.
இங்கு பீடிகைகளுக்கு நேரமில்லை, அனைவரும் வேலையில் இறங்க வேண்டும். அதைத்தான் நாங்கள் செய்கின்றோம். காந்தியை நான் மகாத்மா என்று கூப்பிடுவதில்லை, நான் அவர் சந்ததி என நம்புகின்றேன்.
மகளிர் சாதனையாளர் விருதுகளை ஆண்டுதோறும் வழங்கி இருக்கின்றோம். இரண்டு முறை புடவை கட்டி பெண்ணாக படத்தில் நடித்து இருக்கின்றேன். அப்போதே பெண்ணாக பிறந்த இருக்கலாமோ என்று நினைத்திருக்கின்றேன். இவ்வுலகில் பெண் பெருமை படக்கூடிய பிறவி.
நான் இரண்டு பெண் குழந்தைகளுக்குத் தந்தை என சொல்கின்றனர். அது தான் இல்லை, தமிழ்நாட்டில் 35 ஆயிரம் குழந்தைகள் எய்ட்ஸ் நோய் பாதிக்கப்பட்ட பெற்றோரால் பிறந்து, அவர்களில் பிழைக்க வாய்ப்பில்லை என்ற 2000 குழந்தைகளை நானும் தினத்தந்தி அதிபரும் தேர்வு செய்து அதன் தந்தையாக இருக்க 'பெற்றால் தான் பிள்ளையா' என்ற அமைப்பை உருவாக்கினோம்.
பின், அதற்கு மருந்தை கண்டுபிடித்தார்கள். சிறிய விழுக்காடு மரணத்தைத் தவிர, பலர் அதில் பிழைத்து பல்வேறு பணிகளில் இருக்கின்றனர். ‘பெற்றால் தான் பிள்ளையா’ என்ற அமைப்பின் மூலம் அதைச் செய்ய முடிந்தது.