தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

நீட் தேர்வு தோல்வி பயம் - கடிதம் எழுதி வைத்துவிட்டு மாயமான மாணவர் மீட்பு - கடிதம் எழுதி வைத்துவிட்டு மாயமான மாணவர்

கோயம்புத்தூரைச் சேர்ந்த மாணவர் ஒருவர் நீட் தேர்வு தோல்வி பயத்தால், கடிதம் எழுதிவைத்துவிட்டு வீட்டை விட்டு வெளியேறிய நிலையில் அவர் ஜோலார்பேட்டையில் பத்திரமாக மீட்கப்பட்டார்.

கடிதம் எழுதி வைத்துவிட்டு மாயமான மாணவர் மீட்பு
கடிதம் எழுதி வைத்துவிட்டு மாயமான மாணவர் மீட்பு

By

Published : Sep 23, 2021, 6:48 PM IST

திருப்பத்தூர்:நீலகிரி மாவட்டம் கெந்தரை கிராமத்தைச் சேர்ந்தவர் அரசுப் பள்ளி ஆசிரியர் மதன். இவரது மனைவி அம்பிகாவதி. இவர்களுக்கு 19 வயதில் விக்னேஷ் என்ற மகன் உள்ளார். இவர் கடந்தாண்டு நீட் தேர்வு எழுதுவதற்காக, அவரது தாய் அம்பிகாவதி தனது மகனுடன் கோயம்புத்தூர் மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் விஜயலட்சுமி நகரில் வீடு எடுத்து தங்கினர்.

கடந்த வருடம் எழுதிய நீட் தேர்வில் விக்னேஷ் குறைந்த மதிப்பெண் பெற்றதால் மீண்டும் இந்தாண்டு நீட் தேர்வு எழுதுவதற்காக நீட் பயிற்சி மையத்தில் சேர்ந்தார். இதனையடுத்து கடந்த வாரம் 12ஆம் தேதி நடந்த நீட் தேர்வை எழுதிய விக்னேஷ், சோகமாகவே இருந்து வந்துள்ளார்.

மாயமான மாணவன்

இந்நிலையில், நேற்று (செப்.22) மதியம் வீட்டிலிருந்து விக்னேஷ் திடீரென மாயமானார். இதனையடுத்து, அவரது தாயார் பல இடங்களில் அவரை தேடினார். பின்னர், விக்னேஷின் படுக்கையறைக்குச் சென்ற அம்பிகாவதி, விக்னேஷின் டைரியை எடுத்துப் பார்த்துள்ளார். அதில், “அப்பா அம்மாவிற்கு - நீங்கள் எதிர்பார்த்ததை என்னால் கொடுக்க முடியவில்லை.

இந்த முறையும் நீட் தேர்வில் ஏமாற்றம்தான். உண்மையை கூற எனக்குப் பயமாக இருக்கிறது. இதற்கு மேலும் இந்த வீட்டில் இருப்பதற்கோ, உங்களை அப்பா, அம்மா என்று அழைப்பதற்கோ எனக்குத் தகுதியில்லை. சரியா தவறா என்று தெரியவில்லை ஆனால் வீட்டை விட்டுச் செல்ல முடிவு செய்துள்ளேன். இன்று நான் என் வெற்றிப் பாதையை நோக்கி வெகுதூரம் செல்கிறேன்.

என்னைத் தேட வேண்டாம், இன்னும் சில வருடங்களில் திரும்பி வருவேன், வெற்றி பெற்றவனாக. இது சத்தியம்” என எழுதி வைத்துள்ளார். இதனைக் கண்ட தாயார் அம்பிகாவதி, உடனடியாக பெரியநாயக்கன்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

மாணவன் மீட்பு

புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், காணாமல் போன மாணவன் விக்னேஷை தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று (செப்.22) நள்ளிரவு அந்த மாணவன் கோயம்புத்தூர் ரயில் நிலையத்திலிருந்து சென்னை செல்லும் ஆலப்புழா எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏறியதாக திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ரயில்வே காவல் துறையினருக்குத் தகவல் கிடைத்துள்ளது.

ஜோலர்பேட்டை சந்திப்பு

இதையடுத்து, ரயில்வே காவல் ஆய்வாளர் ரத்தினகுமார் உள்ளிட்ட காவல் துறையினர், தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது கோயம்புத்தூர் வழியாக 3ஆவது பிளாட்பாரத்தில் வந்து நின்ற ரயிலில் இருந்த விக்னேஷை காவல் துறையினர் பத்திரமாக மீட்டனர்.

அதன் பிறகு அவரது பெற்றோர்களை வரவழைத்து மாணவனை பத்திரமாக ஒப்படைத்தனர். மேலும், ரயில்வே காவல் ஆய்வாளர் ரத்தினகுமார், மாணவனுக்கு அறிவுரை வழங்கி அனுப்பி வைத்தார்.

இதையும் படிங்க:நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் - ராமதாஸ்

ABOUT THE AUTHOR

...view details