கோயம்புத்தூர்:வனச்சரகங்கள் பெரும்பாலும் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் அமைந்துள்ளது. இந்த பகுதியில் நல்ல சீதோசன நிலை இருப்பதால், யானைகளின் நடமாட்டம் அதிகமாக காணப்படுகிறது. இதில், வலசை செல்லும் யானைகள் உணவைத் தேடி வனப்பகுதியை விட்டு அருகிலுள்ள கிராமங்களுக்குள் நுழைந்து விடுகின்றன.
பிளாஸ்டிக்கை உணவாக்கிய யானைகள்
இரவு நேரங்களில் வனத்தை விட்டு வெளியேறும் யானைகள் அருகிலுள்ள விவசாய நிலங்களுக்கு சென்று உணவு எடுத்துக்கொண்டு திரும்புவது வழக்கம். இந்நிலையில், வனத்தை ஒட்டி குப்பை கொட்டுவதால் வனத்திலிருந்து வெளியேறும் யானைகள் அதில் கிடைக்கும் உணவுகளை சாப்பிடுவது மட்டுமல்லாமல் அதிலுள்ள பிளாஸ்டிக் கழிவுகளையும் உண்பதால் யானைகளின் உடல் நலம் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
மேலும், பெரும்பாலான யானைகளின் சாணத்தில் பிளாஸ்டிக் கழிவுகள் உள்ளதால் அதன் மூலம் யானைகள் அதிகளவில் பிளாஸ்டிக் கழிவுகளை உண்பது தெரியவந்துள்ளதாக கோயம்புத்தூர் வன உயிரின அறக்கட்டளை தலைவர் முருகானந்தம் தெரிவித்துள்ளார். மேலும், குப்பை கிடங்குகளில் பிளஸ்டிக் கழிவுகளை உண்பதால் யானைகளின் இரைப்பையில் அதிகளவில் பிளாஸ்டிக் கழிவுகள் தங்கும் சூழல் ஏற்படுகிறது.
பொதுவாக யானைகளுக்கு ஜீரண சக்தி என்பது குறைவாகவே இருக்கும். பிளாஸ்டிக் கழிவுகள் அதன் வயிற்றில் தங்குவதால் உடல் உபாதைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. அது மட்டுமில்லாமல் மலையடிவார பகுதியிலுள்ள இடங்களில் கிடக்கும் யானைகளின் சானத்தில் பிளாஸ்டிக் கவர்கள் அதிகளவில் காணப்படுகிறது. இது குறித்து மாவட்ட நிர்வாகமும், வனத் துறையும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வனத்துறையின் நடவடிக்கை என்ன?
யானைகள் சாப்பிடும் தாவரங்களால் வனப்பகுதிக்குள் அதிகளவில் செடிகள் வளர்கின்றன. அதன் காரணமாக காடுகள் அடர்த்தியாக இருக்கும் சூழலில் தற்போது அதிகளவில் பிளாஸ்டிக் கழிவுகளை உண்பதால் யானைகள் மூலம் மரங்கள் வளர்ப்பது என்பது குறைந்து போகும். அதனால் வனத்தில் அடர்த்தி குறைய வாய்ப்புள்ளது. எனவே வன எல்லையை ஒட்டி குப்பை கிடங்குகள் அமைப்பதை தடுக்க வேண்டும், ஏற்கனவே உள்ள குப்பைகளை அகற்ற வனத்துறை முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து மாவட்ட வன அலுவலர் வெங்கடேஷ் கூறியதாவது, “வனத்தை ஒட்டி அமைக்கப்பட்டுள்ள குப்பை கிடங்குகளை அகற்ற மாவட்ட நிர்வாகத்திற்கு கடிதம் எழுதியுள்ளோம். அந்த குப்பைக் கிடங்குகள் அகற்ற அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும்” என தெரிவித்தார்.
இதையும் படிங்க: காட்டுயானைகளை விரட்ட கூடுதல் வனக்காவலர்கள்: அரசுக்கு கோரிக்கை