கோவை மாவட்டம் குன்னத்தூராம்பாளையம் பகுதியைச் சேர்ந்த ரமேஷ்குமார் அரசு ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு அனுமதி வாங்கிக்கொண்டு விடுமுறை எடுத்துள்ளார். ஆனால், அவருக்கான மாதாந்திர வருகை பதிவேட்டில் விடுமுறை என குறிப்பிட்டிருப்பதை கண்டு பணிமனை அலுவலர்களிடம் கேட்டுள்ளார்.
விடுமுறை எனக் குறிப்பிட்டதால் ஓட்டுநர் தற்கொலை முயற்சி - அரசுப் பேருந்து ஓட்டுநர்
கோவை: அனுமதி கேட்டு விடுப்பு எடுத்த நிலையில் விடுமுறை எனக் குறிப்பிட்டதால் அரசுப் பேருந்து ஓட்டுநர், பணிமனை முன்பு தீக்குளித்து தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார்.
அதற்கு அவர்கள் உரிய பதில் தராததால் அரசுப் பணிமனை முன்பு திடீரென பெட்ரோலை ஊற்றி தீ குளிக்க முயன்றுள்ளார். இதனையடுத்து, அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு அன்னூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளித்த பின்னர், மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
இதுகுறித்து ரமேஷ் குமார் கூறுகையில், “ ஒரு நாள் அனுமதி கேட்டு சென்றதற்கு எனக்கு விடுமுறை என்று குறிப்பிட்டுள்ளனர். ஆனால், அதிமுகவைச் சேர்ந்த ஓட்டுநர்களுக்கு விடுமுறை எனக் குறிப்பிடாமல் உள்ளார்கள். அதிமுக தொழிற்சங்கங்களை சேர்ந்தவர்களுக்கு மட்டும் ஏராளமான சலுகைகள் வழங்குகின்றனர். ஆனால், மற்ற தொழிற்சங்கங்களை சேர்ந்தவர்களுக்கு அதிக வேலை தந்து மன உளைச்சலை ஏற்படுத்துகின்றனர்”, எனக் கூறினார். மேலும், இதனைக் கண்டித்துத் தீக்குளிக்க முயன்றதாகவும் அவர் தெரிவித்தார்.