கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள பில்லூர் அணை இவ்வாண்டு பருவமழை காரணமாக மூன்றாவது முறையாக நிரம்பியது. தென்மேற்குப் பருவமழையைத் தொடர்ந்து வடகிழக்குப் பருவமழை முன்கூட்டியே தொடங்கியதால் பில்லூர் அணை நிரம்பியது. இதன் காரணமாக பில்லூர் அணையிலிருந்து உபரிநீர் பவானி ஆற்றில் வெளியேற்றப்பட்டுவருகிறது.
நீர் சூழ்ந்திருக்கும் கிராமங்கள்...
அந்த நீரானது ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையை அடைகிறது. இதனைத் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்ததால் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் உயர்ந்து 100 அடிக்கு மேலாக உள்ளது. இதன் காரணமாக பவானிசாகர் அணையின் நீர்த்தேக்கப் பகுதியில் நீர் அதிகரித்து அப்பகுதியில் உள்ள ஆதிவாசி கிராமங்களான உளியூர், காந்தையூர், மொக்கைமேடு, ஆகிய கிராமங்களைத் தண்ணீர் சூழ்ந்துள்ளது.
வெள்ளத்தில் மூழ்கிய பாலம் இத்தருணத்தில் பூர்வக்குடி கிராமப் பகுதிகளை நகரத்துடன் இணைக்கும் லிங்காபுரம், காந்தவயல் உயர்மட்ட பாலம் தற்போது தண்ணீரில் மூழ்கியுள்ளது. இதனால் போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து பரிசிலை பயன்படுத்தியே நகரப் பகுதிக்கு கிராம மக்கள் வர வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
30 அடி உயரம் கொண்ட இந்த உயர்மட்ட பாலமானது, பவானிசாகர் அணை 100 அடியை எட்டும்போது, முழுவதுமாக நீரில் மூழ்குவது வழக்கம். இந்தப் பாலத்தை கடந்துதான் நகர பகுதிகளுக்கு பொதுமக்கள் செல்ல வேண்டும் என்பதால், வெள்ளம் சூழ்ந்துள்ள கிராம மக்கள் ஆபத்தான முறையில் பரிசல் பயணம் மேற்கொண்டுவருகின்றனர்.
விளைவித்த பொருள்கள் எல்லாம் நாசம்...
பள்ளி, கல்லூரிகளுக்குச் செல்லக்கூடிய மாணவர்களும் வேலைக்குச் செல்லக்கூடிய இளைஞர்களும் ஆபத்தான முறையில் எந்த ஒரு பாதுகாப்பு உபகரணங்களும் இன்றி பரிசல் பயணம் மேற்கொண்டுவருகின்றனர். அத்தியாவசியப் பொருள்களான பால், காய்கறி, சமையல் எரிவாயு உருளை என அனைத்தும் பரிசல் மூலம் எடுத்துச் செல்லப்படுகின்றன.
பள்ளி மாணவர்கள் ஆபத்தான முறையில் பரிசல் பயணம் அத்துடன் அப்பகுதி கிராம மக்கள் விளைவித்த விளைபொருள்களைச் சந்தைப்படுத்த, பரிசலைப் பயன்படுத்தும் சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும் உரிய நேரத்தில் விளைவித்த பொருள்களை வெளியே எடுத்துச் செல்ல முடியாததால், விலை கிடைக்காமல் பெரும் இழப்பு ஏற்படுவதாக விவசாயிகள் வருத்தத்துடன் தெரிவிக்கின்றனர்.
ஆபத்தான பயணம்...
இது குறித்து பள்ளி மாணவர்கள் கூறுகையில், “தற்போது இந்தப் பாலம் நீரில் மூழ்கியுள்ளதால் பரிசலை பயன்படுத்திய பள்ளிக்குச் செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதன் காரணமாக உரிய நேரத்திற்குப் பள்ளிக்குச் செல்ல முடியவில்லை. தண்ணீரில் வரும்போது எந்த ஒரு பாதுகாப்பும் இன்றி வர வேண்டிய சூழல் உள்ளது. பள்ளி மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டாவது உயர்மட்ட பாலம் கட்டித்தர வேண்டும்” என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இது குறித்து பலமுறை மாவட்ட நிர்வாகத்துக்கு மனு அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் பொதுமக்கள் ஆபத்தான முறையிலேயே பரிசல் பயணம் மேற்கொண்டுவருவதாகவும் கவலை தெரிவித்த கிராம மக்கள், மூன்று கிராமங்களை இணைக்கும் இந்த உயர்மட்ட பாலத்தை இன்னும் அதிக உயரத்திற்கு கட்டித் தந்தால் மட்டுமே இதுபோன்ற பிரச்சனைகளிலிருந்து விடுபட முடியும் எனக் கோரிக்கைவைத்துள்ளனர்.