கோயம்புத்தூர்: மருதமலை பகுதியில் உள்ள பாரதியார் பல்கலைக்கழகத்தில் பதிவாளராகவும், விலங்கியல் துறை தலைவராகவும் இருந்தவர் முருகன். இவர் கடந்த 30ஆம் தேதி பணியில் இருந்து ஓய்வு பெற்ற நிலையில், அதற்கு மறுநாள் (ஜூலை 1) பல்கலைகழகத்திற்கு அவரது பொருள்களை எடுக்க வந்துள்ளார்.
அன்று துணைவேந்தர் அறையின் அருகில் உள்ள விருந்தினர்கள் காத்திருக்கும் அறையில் வைத்து, பாஜகவின் மாநில இளைஞரணி செயலாளர் ப்ரீத்தி லட்சுமி, மாநில ஊடகப் பிரிவு செயலாளர் சபரி கிரீஸ் ஆகியோர், முருகன் பாஜகவில் இணைந்ததற்கான அடையாள அட்டையை வழங்கியுள்ளனர்.
முகநூல் பதிவால் சர்ச்சை
ஓய்வு பெற்ற பாரதியார் பல்கலை., பதிவாளர் முருகன் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்ததை பிரீத்தி லட்சுமி தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். பல்கலைகழக அறையில் வைத்து முருகன் பாஜகவில் இணைக்கப்பட்ட விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதுகுறித்து விளக்கம் அளித்த பாஜக மாநில இளைஞரணி செயலாளர் ப்ரீத்தி, பல்கலைக்கழகத்தில் வேறு ஒருவரை பார்ப்பதற்காக சென்ற போது, பதிவாளர் முருகனை பார்த்தாகவும், அவர் பணியில் இருந்து ஓய்வு பெற்று விட்டதால் அவருக்கு கட்சியின் அடையாள அட்டையை கொடுத்ததாகவும் விளக்கமளித்தார்.