கோவை:மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர்மழையால், பில்லூர் அணை முழுக் கொள்ளளவை எட்டியுள்ளதால் அதிக அளவில் உபரி நீர் வெளியேற்றப்படுகிறது.நேற்றைய நிலவரப்படி 12 ஆயிரம் கன அடி நீர் பில்லூர் அணையில் இருந்து வெளியேற்றப்பட்டு வருகிறது. இதன் காரணமாக ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானிசாகர் அணையும் வேகமாக நிரம்பி வருகிறது.
பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 102 அடியாக உயர்ந்துள்ளதால், அணையில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மேட்டுப்பாளையம் அருகே உள்ள சிறுமுகை, காந்தவயல், ஆலங்கொம்பு உள்ளிட்ட இடங்களில் பவானி ஆற்றின் கரையோரப் பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது. இதனால் அப்பகுதிகளில் பயிரிடப்பட்டுள்ள 3000-க்கும் மேற்பட்ட வாழை மரங்களை உள்ளடக்கிய வாழைத்தோட்டங்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளன.