கோயம்புத்தூர்: கடந்த 28 ஆம் தேதி நள்ளிரவில் ஹோப் காலேஜ் பகுதியிலிருந்து வீட்டிற்கு ஆட்டோவில் பயணம் செய்த பெண்ணிற்கு பாலியல் தொல்லை அளித்த ஆட்டோ ஓட்டுநரை பீளமேடு காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த 22 வயது இளம்பெண் தனியார் நிறுவனத்தில் கடந்த 8 மாதங்களாக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் கடந்த 28 ஆம் தேதியன்று பணி நிமித்தமாக அப்பெண் திருப்பூருக்கு சென்றுள்ளார். பின்னர் இரவு நேரத்தில் கோவை திரும்பிய அப்பெண், ஹோப் காலேஜ் பகுதிக்கு வந்துள்ளார்.
அங்கிருந்து செல்வபுரத்தில் உள்ள வீட்டிற்கு செல்வதற்காக ஆட்டோவை செயலி மூலம் புக் செய்துள்ளார். பின்னர் சிறிது நேரத்தில் ஒரு ஆட்டோ ஓட்டுநர் வந்து அப்பெண்ணை ஏற்றிக் கொண்டு சென்றுள்ளார். கோவை - அவிநாசி சாலையில் உள்ள பீளமேடு காவல்நிலையம் முன்பு ஆட்டோ சென்ற போது, ஆட்டோவில் இருந்த பெண்ணிற்கு ஆட்டோ ஓட்டுநர் பாலியல் தொல்லை அளித்ததாக கூறப்படுகிறது.
இதனால் அப்பெண் ஆட்டோவை நிறுத்துமாறு கூறியுள்ளார். ஆனால் அதனை ஏற்க மறுத்த ஆட்டோ ஓட்டுநர் ஆட்டோவை நிறுத்தாமல் தொடர்ந்து ஓட்டியுள்ளார். இதனையடுத்து தன்னை கடத்த முயற்சிப்பதை உணர்ந்த அப்பெண் அதிர்ச்சி அடைந்து ஆட்டோவிலிருந்து கீழே குதித்து தப்பினார். இதில் அப்பெண்ணிற்கு முதுகு, தலை மற்றும் கால்களில் படுகாயம் ஏற்பட்டது.