கோயம்புத்தூர்:மேட்டுப்பாளையம் அடுத்த சிறுமுகை பகுதியில் காந்த வயல் பழங்குடியினர் கிராமம் உள்ளது. இக்கிராமத்திற்கு சிறுமுகையிலிருந்து பவானி ஆற்றைக் கடந்துதான் மறுபுறம் உள்ள லிங்காபுரத்திற்குச் செல்ல வேண்டியிருந்தது என்பதால் அங்கு உயர்மட்ட பாலம் ஒன்று கட்டப்பட்டது.
இந்தப் பாலம் பவானிசாகர் அணை நீர்ப்பிடிப்புப் பகுதியில் உள்ளதால் அணையின் நீர்மட்டம் 100 அடிக்கு மேல் உயரும்போது இந்தப் பாலம் நீரில் மூழ்கிவிடுகிறது. இதனால், காந்தவயல், உளியூர் பழங்குடியின கிராமங்களுக்குப் பரிசல் மூலமே செல்ல வேண்டிய சூழல் நிலவிவருகிறது.
மேலும், பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளும் வேலைக்குச் செல்வோரும் ஆபத்தான பரிசல் பயணத்தைத்தான் மேற்கொண்டுவருகின்றனர். வருடத்தில் ஆறு மாதங்கள் இதே நிலை நீடிப்பதால், உயர்மட்ட பாலத்தின் அருகே நீரில் மூழ்காதவாறு மீண்டும் ஒரு உயர்மட்ட பாலம் கட்ட வேண்டும் எனப் பழங்குடியின மக்கள் கோரிக்கைவைத்து-வருகின்றனர்.
பரிசலில் சென்று குழந்தையை மீட்டுவந்த ஆம்புலன்ஸ் பணியாளர்கள் இரண்டு ஆம்புலன்ஸ்கள்
இந்நிலையில், காந்தவயல் பழங்குடியின கிராமத்தில் இளம்பெண் ஒருவருக்கு நேற்று காலை பிரசவலி ஏற்பட்டுள்ளது. அதனால், 108 அவசர ஆம்புலன்ஸ் சேவைக்குத் தகவல் அளிக்கப்பட்டு அங்கு, இரண்டு 108 ஆம்புலன்ஸ் வாகனங்கள் கொண்டுவரப்பட்டன. ஒரு ஆம்புலன்ஸ் வாகனம், வனப்பகுதி வழியாக ஆற்றைக் கடந்து கிராமத்திற்குச் சென்றது. மற்றொரு வாகனம் நீர் தேங்கியுள்ள பகுதியில் நிறுத்தப்பட்டது.
தொடர்ந்து 108 ஆம்புலன்ஸ் பணியாளர்கள் கிராமத்திற்குச் சென்ற நிலையில், அப்பெண்ணிற்கு ஆண் குழந்தை பிறந்தது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து ஒரு குழுவினர் குழந்தையை பரிசல் மூலம் ஆம்புலன்ஸ்க்கு கொண்டுவந்தனர். குழந்தையின் தாய் மற்றொரு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பிவைக்கப்பட்டார்.
இது குறித்து, 108 ஆம்புலன்ஸ் பணியாளர்கள் கூறுகையில், "காந்தவயல் கிராமத்தைச் சுற்றி நீர் சூழ்ந்துள்ளதால் இரு திட்டத்தைச் செயல்படுத்தினோம். ஒன்று வனப்பகுதி வழியாக ஆற்றைக் கடந்து கிராமத்திற்குச் செல்வது. இதில், காலதாமதம் ஏற்படும் நிலையில் பரிசலில் சென்று கர்ப்பிணியை அழைத்துவருவது என்று முடிவுசெய்தோம். ஏனென்றால், பரிசலில் ஆற்றைக் கடந்தால் 2 கி.மீ. தூரம்தான். வனப்பகுதியில் கடந்தால் 5 கி.மீ. தூரம்.
அப்பெண்ணிற்கு வீட்டிலேயே பிரசவம் ஆனது. மேலும், வனப்பகுதி வழியாக குழந்தையை அழைத்துவந்தால் கால தாமதமாகும். எனவே, குழந்தையைப் பரிசலில் கொண்டுவந்து முதலுதவி அளிக்கப்பட்டது. பின்னர் தாய், சேய் இருவரும் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்" என்றனர்.
இதையும் படிங்க: அடிப்படை வசதிக்காக தவிக்கும் சர்க்கஸ் கலைஞர்கள்...