கோயம்புத்தூர்:குனியமுத்தூரை சேர்ந்த நகை தொழிலாளி யு.எம்.டி ராஜா. இவர் 75ஆவது சுதந்திர தினவிழாவை முன்னிட்டு தன் கண்ணில் தேசிய கொடியை வைத்து அசத்தியுள்ளார். முட்டையின் ஓட்டில் கீழ் உள்ள மெல்லிய வெள்ளை(தண்ணீர் போன்ற படலம்) படத்தை எடுத்து அதில் தேசிய கொடி கொடியை வண்ணங்களால் வரைந்து அதனை கண்ணின் வெள்ளை விழியில் ஒட்டியுள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், “வருடம் தோறும் சுதந்திர தினவிழாவை முன்னிட்டு, பல்வேறு வகையில் ஓவியங்கள் வரைந்து வருகிறேன். அதன்படி 75 ஆவது சுதந்திர தினவிழாவை முன்னிட்டு மக்கள் முன்பு ஒரு கலை படைப்பை தர வேண்டும் என்பதற்காக சிந்திக்கும் போது, பள்ளி பருவத்தில் படித்த "தேசிய கொடியை கண்ணிமை போல் காப்போம்" என்ற வார்த்தை மனதில் தோன்றியது.
அதை வைத்து கண்ணுக்குள் தேசிய கொடி ஓவியம் வரைய முடிவு செய்தேன். அதற்காக முயற்சி செய்தேன், அதனை முயற்சிக்கும் போது பல்வேறு சிரமங்கள் ஏற்பட்டன. கண் மருத்துவரிடம் இது குறித்து ஆலோசனை மேற்கொண்ட போது, அவரும் இது போன்று செய்ய வேண்டாம் என அறிவுரை வழங்கினார்.
இருப்பினும் அதனை செய்து முடிக்க வேண்டுமென ஆர்வம் இருந்து கொண்டே இருந்தது. சுதந்திர போராட்ட வீரர்கள் நமக்கு வாங்கி கொடுத்த சுதந்திர நினைவுகள் என்னை வேலை செய்ய விடாமல் தடுத்தது. எனவே மீண்டும் முயற்சி செய்தேன், அப்போது முட்டை ஓட்டில் கருவிற்கு மேல் லேசான படலத்தில் வரையலாமென எண்ணம் தோன்றியது.