சென்னை: கரோனா ஊரடங்கின் காரணமாக பலர் வீட்டிலிருந்தபடியே சம்பாதிக்கும் வகையில் வேலைகளைத் தேடி வருகின்றனர். அந்த வகையில், ஃப்யான் டெக் எண்டர்பிரைசஸ் (Fyon Tech Enterprises) என்ற தனியார் நிறுவனம் டேட்டா என்ட்ரி பணிக்கு ஆட்கள் தேவையென்றும் வீட்டிலிருந்தே அதிக வருமானம் ஈட்டலாம் எனவும் இணையத்தில் விளம்பரம் செய்தது.
இதை நம்பி அந்நிறுவனத்தை அணுகியவர்களிடம் ஒரு நாள் முதல் ஒரு வாரம் வரை வேலை வாங்கிவிட்டு ஊதியம் கொடுக்காமல், "நீங்கள் செய்த வேலையில் தவறு உள்ளது" என்று கூறி அந்நிறுவனம் மிரட்டிப் பணம் பறித்து வந்துள்ளது.
இது குறித்து சென்னை நெற்குன்றம் பகுதியைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி திவாகர் (24) ஜெ.ஜெ. நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரில், "ஃப்யான் டெக் எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் விளம்பரத்தைக் கண்டு அவர்களை அணுகினேன்.
இணையவழியில் அப்ளிகேஷனை பூர்த்தி செய்து கொடுத்தால் 20 ரூபாய் வீதம் எத்தனை அப்ளிகேஷன் பூர்த்தி செய்கிறீர்களோ அதற்கு ஏற்றார்போல் வருமானம் பெறலாம் என்று அவர்கள் கூறினர். அவர்களின் அறிவுறுத்தலின்படி நான் ஒரு நாளைக்கு 800 அப்ளிகேஷன்களை பூர்த்தி செய்து அனுப்பினேன்.
ஆனால் அவர்கள் அதற்கான ஊதியத்தை அளிக்காமல் எனது பணியில் தவறிருப்பதாகக் கூறி நஷ்ட ஈடாக 20 லட்சம் ரூபாய் தருமாறு மிரட்டினர். அவர்களின் மிரட்டலுக்கு பயந்து அவர்கள் சொன்ன வங்கி கணக்கிற்கு 1.90 லட்சம் ரூபாய் வரை பணத்தை செலுத்தினேன்.