சென்னை: அண்ணா நகரை சேர்ந்த இளம் பெண் தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.கடந்த 3 மாதங்களுக்கு முன் சமூக வலைதளம் மூலம் ராஜ் என்ற பெயரில் ஆண் நண்பர் ஒருவர் அறிமுகமாகியுள்ளார்.
நாளடைவில் நெருங்கிப் பழகிய இருவரும் தனிப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்துகொண்டதாகக் கூறப்படுகிறது.
பின்னர் ராஜ் அந்த இளம் பெண்ணிடம் தனது வங்கிக் கணக்கிற்கு 50 ஆயிரம் பணம் அனுப்ப வேண்டும் எனவும், இல்லையேல் தனிப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து விடுவதாக மிரட்டியுள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த இளம் பெண் அந்த இளைஞரின் வங்கிக் கணக்கிற்கு கடந்த மாதம் 20 ஆயிரம் ரூபாய் பணம் அனுப்பி வைத்துள்ளார்.
கைது - விசாரணை
அதன் பின்னரும் அந்த இளைஞர் தொடர்ந்து பணம் கேட்டு மிரட்டிய நிலையில், இது குறித்து அண்ணா நகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இளம் பெண் புகார் அளித்தார்.
அதன் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, இளம் பெண்ணிடம் பழகி வந்த இளைஞரின் செல்போன் ஐ.பி அட்ரஸ் மூலம் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் அந்த இளைஞர் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி மனோஜ் குமார் (29) என்பதும், ராஜ் என்ற போலியான பெயரில் பலரிடம் சமூக வலைதளத்தில் அறிமுகமாகி பழகி பணப் பறிப்பில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது.
இதனையடுத்து தனிப்படை காவல்துறையினர், தேனி விரைந்து இளம் பெண்ணை பணம் கேட்டு மிரட்டிய மனோஜ் குமார் என்ற இளைஞரை கைது செய்து, சென்னை அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க:பிபின் ராவத் உள்ளிட்டோரை மீட்ட தீயணைப்புத் துறையினரின் துயரம் - செவிசாய்க்குமா அரசு?