சென்னை: சாலிகிராமத்தில் ஏ.எஸ்.கே ஸ்டூடியோ நடத்தி வருபவர் ஐயப்பன். இவர் கடந்த மாதம் விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில் தன்னிடம் கேமரா வாடகைக்கு வேண்டும் எனக்கூறி 13 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கேமரா மற்றும் லென்ஸ்களை வாங்கிச் சென்று திருப்பித் தராமல் மோசடி செய்த சுபா என்கிற சுமங்கலி மற்றும் லட்சுமி தேவி ஆகிய இரண்டு பெண்கள் மீது புகார் அளித்திருந்தார்.
காவல்நிலையத்தில் புகார் அளிக்கும் போது இந்தப் பெண்கள் மோசடியில் ஈடுபடுபவர்கள் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து ஸ்டூடியோ வைத்து கேமராக்களை வாடகைக்கு கொடுக்கும் உரிமையாளர்கள் வாட்ஸ்அப் குரூப்பில், மோசடி பெண்கள் இருவர் குறித்த பதிவை புகைப்படத்துடன் ஐயப்பன் போட்டுள்ளார்.
இந்தப் பதிவை வாட்ஸ்அப் குழுவில் உள்ள மற்ற உறுப்பினர்களில் சிலர் பார்த்துவிட்டு, தாங்களும் இது போன்று கேமராவை இழந்துள்ளதாக அடுத்தடுத்து பதிவுகளை போட்டுள்ளனர். இவ்வாறாக 10க்கும் மேற்பட்டோரிடம் சுமார் 25 லட்சம் மதிப்புள்ள கேமராக்களை சுமங்கலி மற்றும் லட்சுமி இருவரும் ஏமாற்றி வாங்கிச் சென்றது தெரியவந்தது.
பின்னர் பாதிக்கப்பட்டவர்கள் ஒன்று சேர்ந்து சென்னை விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்நிலையில் கே.கே நகரில் உள்ள மற்றொரு ஸ்டூடியோவில் இரண்டு பெண்கள் கேமரா வாடகைக்குக் கேட்டுள்ளனர். அப்போது வாட்ஸ்அப் பதிவு மூலம் உஷாரான ஸ்டூடியோவின் உரிமையாளர் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு தகவல் கொடுத்துள்ளார்.
இதனை அடுத்து பாதிக்கப்பட்டவர்கள் காவல் துறைக்கு தகவல் கொடுத்து கையும் களவுமாக சுமங்கலி மற்றும் லட்சுமி தேவி ஆகிய இருவரையும் கைது செய்துள்ளனர். விசாரணை செய்ததில் சுமங்கலி பி.டெக் படிப்பை முடித்துவிட்டு விவாகரத்தாகி தனியாக வாழ்ந்து வருவதும், லட்சுமி திருமணம் செய்துகொள்ளாமல் இருப்பதும் தெரியவந்தது.
மேலும் சுமங்கலி மற்றும் லட்சுமி ஆகியோர் பல நபர்களை வேலைக்கு சேர்த்துகொண்டு மோசடியில் ஈடுபடுவதும் தெரியவந்தது. பலே கில்லாடிகளாக இரண்டு பெண்களும் நூதன முறையில் பல ஸ்டூடியோக்களில் கேமராவை வாடகைக்கு எடுத்து மோசடி செய்ததும் தெரியவந்தது.
குறிப்பாக சுமங்கலி மற்றும் லட்சுமி சினிமா நிகழ்ச்சிகளில் மீடியாவில் வேலை பார்ப்பதுபோல் பலரிடம் பழகி நட்பை வளர்த்துக் கொண்டு, அவர்கள் மூலமாக கேமரா பற்றிய பல்வேறு தொழில்நுட்ப தகவல்களை தெரிந்து கொண்டு, அவ்வாறு பழக்கமான நபர்களிடம் குறும்படத்திற்காகவும் ,சினிமா பிரபலங்களின் நிகழ்ச்சிக்காகவும் கேமராக்கள் வாடகைக்கு யாரும் கொடுக்கிறார்களா என கேட்டு தகவல் சேகரித்து அதன்பின் அவர்கள் பெயரை பயன்படுத்தி கேமரா வாடகைக்கு விடும் ஸ்டூடியோ நிறுவனங்களை அணுகி விலை உயர்ந்த கேமராக்கள் மற்றும் லென்சுகளை வாடகைக்கு பெற்று மோசடியில் ஈடுபடுவது தெரியவந்தது.
கேமராவை மோசடி செய்தவுடன் குரோம்பேட்டையில் உள்ள சரத் என்பவரிடம் குறைந்த விலையில் கேமரா மற்றும் லென்சுகளை விற்று வந்ததும் தெரியவந்தது. ஏற்கனவே சுமங்கலி மீது சேத்துப்பட்டு, அசோக் நகர் உட்பட பல காவல் நிலையங்களில் இதே மோசடி வழக்கு இருப்பது தெரியவந்துள்ளது.
இது குறித்து பாதிக்கப்பட்டவர்கள் கூறுகையில், முதல் 4,5 நாட்கள் கேமராவிற்கான பணத்தை கொடுத்து இரண்டு பெண்களும் நிறுவனத்தின் நம்பிக்கையை பெறுகின்றனர். அதன்பின் மேலும் திடீரென பெண்கள் ஸ்டுடியோ நிறுவனத்திற்கு வந்து கேமராக்கள் காணாமல் போய் விட்டதாக கூறிவிட்டு இதுதொடர்பாக தாங்களே கேமராவை கண்டுபிடித்து தருவதாகவும் இல்லையெனில் அதற்கான பணத்தை கொடுப்பதாகவும் கடிதம் எழுதிக் கொடுத்ததாகவும் தெரிவித்துள்ளனர். இதனை நம்பி காத்திருந்து தங்களைப் போன்ற பலரும் தனித்தனியாக ஏமாந்து உள்ளதாக ஸ்டூடியோ நிறுவன உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இறுதியாக பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமான் வீட்டு திருமண நிகழ்ச்சி பற்றி தெரிந்துகொண்டு,அதற்கு கேமரா தேவை எனக் கூறி கேமரா வாங்கி சென்று ஏமாற்றியதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
பின்னர் கைது செய்யப்பட்ட இரு பெண்களிடம் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இது போன்று எத்தனை பேரை ஏமாற்றியுள்ளனர் என விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் வாடகைக்கு வாங்கி சென்ற கேமராக்களை சரத்திடம் இருந்து மீட்கும் பணியில் காவல் துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
இதையும் படிங்க:தாயும் மகளும் நடத்திய போலி நிறுவனம் - வழியனுப்ப சென்றபோது அதிரடியாக கைது