சென்னை: வட சென்னை பகுதிக்கு உள்பட்ட மின்ட், ஜி.ஹெச். சாலை, திருவொற்றியூர் பகுதிகளில் ஷேர் ஆட்டோவில் வரும் மூதாட்டிகளை குறிவைத்து, அவர்களின் கவனத்தை திசை திருப்பி கும்பல் ஒன்று நகைகளை தொடர்ந்து திருடிவருவதாக திருவொற்றியூர் காவல் துறையினருக்கு புகார்கள் குவிந்தன.
பாதிக்கப்பட்ட மூதாட்டிகள் ஷேர் ஆட்டோவில் வரும்போது உடன் பயணிக்கும் இக்கும்பலைச் சேர்ந்த பெண்கள் மூதாட்டிகளிடம் மிகவும் கனிவாகப் பேசி குடும்ப விஷயங்கள் குறித்து நலன் விசாரிப்பில் ஈடுபடுகின்றனர்.
பாசமாக பேசி நேக்காக நகை திருடும் பெண்கள்:
பின்னர் அவர்கள் மனதில் இடம்பிடித்துவிட்டதை உறுதிபடுத்திக்கொள்ளும் அக்கும்பலைச் சேர்ந்த பெண்கள் மூதாட்டிகளிடம் "அம்மா உங்கள் நகை அறுந்துள்ளது, கவனிக்கவில்லையா? இப்படி கவனக்குறைவாக இருந்தால் எப்படி? கழற்றி பையில் வைத்துக் கொள்ளுங்கள்" என்றவாறு பேசி அவர்களின் கவனத்தை திசை திருப்புகின்றனர்.
மூதாட்டிகள் நகைகளை பையில் வைத்தப் பின்பு யாருக்கும் தெரியாமல் பிளேடால் பையை கிழித்து அதிலுள்ள நகைகளை அப்பெண்கள் திருடிக்கொண்டு தப்பிச் சென்றுள்ளனர்.
நைசாகப் பேசி நகை திருடிய பெண்கள் மற்றொருபுறம் இதே பாணியில் கனிவாகப் பேசி அவர்களுடன் நெருக்கமாக அமர்ந்து அவர்களின் கழுத்தில் உள்ள நகைகளை அவர்களுக்கே தெரியாமல் அறுத்து எடுத்துச் செல்லும் சம்பவங்களும் அரங்கேறியுள்ளன. இவர்களால் பாதிக்கப்பட்ட மூதாட்டிகளின் குடும்பத்தார் பலர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கக் குவியவே இந்த விவகாரம் சூடுபிடித்துள்ளது.
இதனையடுத்து பெறப்பட்ட புகார்களின் அடிப்படையில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இதன்பிறகு திருவொற்றியூர் உதவி ஆணையர் ஆனந்தன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படை காவல் துறையினர் பாதிக்கப்பட்டவர்கள் குறிப்பிடும் பகுதிகளான மிண்ட், ஜி.ஹெச். சாலை முதல் திருவொற்றியூர் மார்க்கமாகச் செல்லும் சுமார் 60 சிசிடிவி கேமிராக்களை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையின் முடிவில் நகைகளை திருடும் கும்பல், பழனியைச் சேர்ந்த கௌரி (40), சாந்தி (35), சின்னத்தாயி (30) ஆகியோர் என்பது தெரியவந்தது. இதனையடுத்து அப்பெண்கள் கைது செய்யப்பட்டனர்.
பல்வேறு மாவட்டங்களில் குற்ற வழக்குகள்:
மூன்று பேரிடமிருந்தும் சுமார் 12.5 சவரன் நகைகளை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். இந்த மூன்று பேர் மீதும் சென்னை மட்டுமல்லாமல் வேலூர், பழனி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலும் குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதாக காவல் துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து கைது செய்யப்பட்ட மூவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். பாச பிணைப்புடன் பேசி கவனத்தை திசை திருப்பி நகைகளை திருடும் இதுபோன்ற கும்பல்களிடம் பொதுமக்கள் கவனத்துடன் இருக்குமாறு காவல் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
இதையும் படிங்க:மாற்றுத்திறனாளிகளிடம் கோடிக்கணக்கில் பணம் மோசடி: காவல் ஆணையரிடம் புகார்