சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் விரைவில் அறிவிக்கப்பட இருக்கும் சூழ்நிலையில் இருபெரும் திராவிட கட்சிகள் முன்கூட்டியே பரப்புரையை ஆரம்பித்து நடத்தி வருகின்றன. தேர்தல் தேதி அறிவிப்பு வருவதற்கு முன்பு தொகுதிப் பங்கீட்டை இறுதி செய்யக் கட்சிகள் முனைப்புக் காட்டி வருகின்றன. தேர்தல் ஆணைய புதிய விதியால் இரு பெரும் திராவிட கட்சிகளில் உள்ள சிறிய கட்சிகள் திடீர் கலக்கமடைந்துள்ளன.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் உள்ள 234 தொகுதிகளில் கூட்டணியின் பெரிய கட்சிகள் 170 தொகுதிகளுக்குக் குறையாமல் போட்டியிட்டு, மீதமுள்ள தொகுதிகளைக் கூட்டணிக் கட்சிகளின் சிறிய கட்சிகளுக்கு ஒதுக்கப் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.
திமுக கூட்டணியில் காங்கிரஸ், மதிமுக, விசிக, தமிழக வாழ்வுரிமை கட்சி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், கொங்கு மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சிகளும், அதிமுக கூட்டணியில் தாமக, புதிய நீதிகட்சி, கொங்கு இளைஞர் பேரவை, முக்குலத்தோர் புலிப்படை உள்ளிட்ட கட்சிகளும் அங்கம் வகிக்கின்றன.
இரண்டு பெரிய திராவிட கட்சிகள் கூட்டணியில் உள்ள சிறிய கட்சிகளுக்கு ஒற்றை எண்ணிக்கையிலான இடங்களை ஒதுக்கத் திட்டமிட்டுள்ளதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது. தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்பு தொகுதிப் பங்கீட்டை இறுதி செய்ய வேண்டிய கட்டாயத்தில் இரண்டு கட்சிகளும் உள்ளன. கூட்டணிக் கட்சிகளை சமாதானப்படுத்தி தங்கள் சின்னத்தில் நிற்க வைக்கவும் திரைமறைவு பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. தங்களின் சின்னத்தில் நிற்க வைப்பதன் மூலம் அதிக எண்ணிக்கையில் வெற்றி பெற்று ஆட்சி அதிகாரத்தில் இருக்க முடியும், பின் வரும் மாநிலங்களவை தேர்தலுக்கு கை கொடுக்கும் என அரசியல் கட்சிகள் கணக்கு போடுகின்றது.