இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:
மத்திய பாஜக அரசு விவசாயிகளின் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவருவதில் அக்கறை காட்டாமல் அலட்சியப்போக்குடன் செயல்படுகின்றது. விவசாயிகளின் போராட்டம் உலக அளவில் கவனம் பெற்ற நிலையில், சுவீடனைச் சேர்ந்த இளம் சூழலியல் செயற்பாட்டாளரான கிரேட்டா துன்பர்க், போராட்டத்தை 'டூல்கிட்' எனப்படும் 'தகவல் தொகுப்பு'ஆக தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.
இச்சூழலில், பெங்களூருவைச் சேர்ந்த 22 வயது இளம் சூழலியலாளர் திஷா ரவி அதை ட்விட்டரில் பகிர்ந்து, விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தார். அதற்காக, திஷா ரவி மீது 124-ஏ தேசத்துரோகச் சட்டத்தை ஏவிய டெல்லி காவல் துறை அவரைக் கைதுசெய்து சிறையில் அடைத்துள்ளது. தொடர்ந்து திஷா ரவி போன்று விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தந்த மராட்டியத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் நிகிதா ஜேக்கப், சூழலியல் செயல்பாட்டாளர் சாந்தனா முலக் ஆகியோரையும் தேசத்துரோக வழக்கில் கைதுசெய்ய மத்திய அரசு முனைந்துள்ளது.
குடியரசு நாளன்று, டெல்லியில் விவசாயிகள் செங்கோட்டையை நோக்கி நடத்திய பேரணியில் வன்முறை திட்டமிட்டு ஏவப்பட்டதை ஆதாரங்களுடன் ஊடகங்களில் செய்தி வெளியிட்டதற்காக, மிருணால் பாண்டே, ராஜ்தீப் சர்தேசாய், வினோத் ஜோஸ், ஜாபர் சூகா, பரேஷ் நாத், அனந்த நாத் ஆகிய ஆறு பத்திரிகையாளர்கள் மீது தேசத்துரோக வழக்குப் பதிவுசெய்யப்பட்டிருப்பது மக்களாட்சி கோட்பாடுகளுக்கும், இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கும் எதிரான நடவடிக்கை ஆகும்.
மத்திய அரசின் செயல்பாடுகளை விமர்சனம் செய்தாலும், விவசாயிகள், சிறுபான்மையினர், பட்டியலின மக்கள் உரிமைப் போராட்டங்களை ஆதரித்தாலும், ஜனநாயகத்தின் குரல்வளையை நெரிக்கும் வகையில், தேசத்துரோக வழக்குப்பதிவு செய்வது கடும் கண்டனத்துக்கு உரியதாகும். பெங்களூரு திஷா ரவி மீது ஏவப்பட்டுள்ள தேசத்துரோக வழக்கை ரத்துசெய்து, அவரை விடுதலை செய்ய வேண்டும். இன்னும் சிலரையும் தேசத்துரோக வழக்கில் கைதுசெய்யும் முயற்சியைக் கைவிட வேண்டும்.
இவ்வாறு அறிக்கையில் வைகோ கூறியுள்ளார்.
இதையும் படிங்க: மக்களை கசக்கிப் பிழிகிறது மத்திய அரசு! - வைகோ கண்டனம்!