தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

நீட் தேர்வு ஓ.எம்.ஆர். முறைகேடு? - சிறப்பு புலனாய்வு விசாரணை குறித்து நீதிபதி கேள்வி! - சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை: நீட் தேர்வு ஓ.எம்.ஆர். விடைத்தாளில் முறைகேடு நடந்துள்ளதாக தொடரப்பட்ட வழக்கை ஏன் சிறப்பு புலனாய்வு விசாரணைக்கு மாற்றக்கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

high court
high court

By

Published : Feb 9, 2021, 4:23 PM IST

நீட் தேர்வு முடிந்து அக்டோபர் 5 ஆம் தேதி தேசிய தேர்வு முகமை அதன் இணையதளத்தில் ஓ.எம்.ஆர். விடைத்தாள்களை வெளியிட்டது. அதில் அக்டோபர் 8 முதல் 16 ஆம் தேதி வரை 700 க்கு 594 மதிப்பெண்கள் பெற்றதாக காட்டிய நிலையில், அக்டோபர் 17 ஆம் தேதி திடீரென தன் மதிப்பெண்களை 248 ஆக குறைத்து ஓ.எம்.ஆர். வெளியிடப்பட்டதாகக் கூறி, கோயம்புத்தூரை சேர்ந்த மனோஜ் என்ற மாணவர் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதி புகழேந்தி முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது, மாணவர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ஒரு தனிப்பட்ட மாணவரால் இணையத்தின் மூலம் நீட் மதிப்பெண்ணை திரிக்க முடியும் என வாதத்திற்காக கூறினால், எண்ணற்ற மாணவர்கள் இதை செய்திருக்கக் கூடும் என்றார். தேசிய தேர்வு முகமையின் குளறுபடியால் மாணவர் பலிகடா ஆகியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

நீட் தேர்வின் நம்பகமற்ற தன்மைக்கு இது ஒரு சிறிய உதாரணம் எனத் தெரிவித்த அவர், தவறை ஒப்புக்கொள்வதற்கு மாறாக தேர்வு முகமையின் கவுரவத்தை காப்பாற்ற மத்திய அரசு முயற்சிப்பதாகவும், மாணவர் மீதோ, தேசிய தேர்வு முகமை மீதோ யார் மீது தவறு இருந்தாலும், இது மாணவர்கள் மற்றும் அவர்களது மருத்துவக் கனவு சம்பந்தப்பட்ட விவகாரம் என்பதால் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டுமென வாதிட்டார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதி, இந்த வழக்கில் சைபர் குற்றங்களை கண்டறிவதில் நிபுணத்துவம் பெற்ற சிபிஐ அதிகாரிகள் மற்றும் தமிழ்நாட்டை சேர்ந்த பிரதிநிதிகள் அடங்கிய சிறப்பு புலனாய்வு பிரிவை அமைக்கலாமா எனக் கேள்வி எழுப்பினார்.

அதற்கான அவசியம் ஏதுமில்லை எனத் தெரிவித்த மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சங்கர நாராயணன், தேசிய தகவலியம் மையம் இதனை விசாரிக்கட்டும் எனவும், அது சுதந்திரமான அமைப்பு என்பதால் மத்திய அரசின் குறுக்கீடு ஏதும் இருக்காது எனவும் தெரிவித்தார்.

தேசிய தேர்வு முகமை சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் மாசிலாமணி, குற்றச்சாட்டுகளில் அடிப்படை முகாந்திரம் இருந்தால் மட்டுமே சிறப்பு புலனாய்வு பிரிவு விசாரணைக்கு உத்தரவிட முடியும் எனவும், இந்த வழக்கில் அப்படி ஏதுமில்லை எனவும் வாதிட்டார். மேலும், ரசாயண முறையில் தயாரிக்கப்பட்டுள்ள ஓ.எம்.ஆர் தாளில் திருத்தம் செய்யவோ, ஏற்கனவே எழுதியவற்றை அழிக்கவோ முடியாதென்பதால், சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டால் அது இந்நிறுவனத்தின் மீதும், கட்டமைப்பின் மீதும் தவறான பிம்பத்தை ஏற்படுத்தும் எனவும் தெரிவித்தார்.

தொடர்ந்து, தேசிய தேர்வு முகமை, மத்திய அரசு மற்றும் மனுதாரர் சார்பில் எழுத்துப்பூர்வ வாதங்கள் சமர்ப்பிக்கப்பட்ட நிலையில், வழக்கு விசாரணை வரும் பிப்ரவரி 18 ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.

இதையும் படிங்க: தலைவி படத்துக்கு தடை கேட்க தீபாவுக்கு உரிமையில்லை- தலைவி பட இயக்குநர்

ABOUT THE AUTHOR

...view details