சென்னை:அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தில், எடப்பாடி பழனிச்சாமி இடைக்கால பொதுச்செயலாளராகத் தேர்வு செய்யப்பட்டார். அவர் தேர்வு செய்யப்பட்ட பொதுக்குழுவில், ஓபிஎஸ் உட்பட அவரது ஆதரவாளர்களை ஈபிஎஸ் நீக்கினார். அப்போது இருந்து அதிமுகவில் ஓபிஎஸ்-ஈபிஎஸ் என இரு அணிகளாகச் செயல்பட்டு வருகின்றனர்.
தற்போது ஓபிஎஸ் தமிழ்நாட்டின் எதிர்க்கட்சி துணைத் தலைவராக இருந்து வருகிறார். ஈபிஎஸ் தரப்பினர் ஓபிஎஸ்சை நீக்கி, முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரை எதிர்க்கட்சி துணைத் தலைவராக நியமனம் செய்தனர்.
இதற்கு, ஈபிஎஸ் தரப்பில் உள்ள எம்.எல்.ஏக்கள் அனைவரிடமும் கையெழுத்து பெற்று சபாநாயகர் அப்பாவுக்கு அனுப்பி வைத்தனர். "அதிமுக விவகாரத்தில் சட்டப்பேரவை தலைவராக என்னுடைய கடமையைச் செய்வேன்" எனப் பலமுறை சபாநாயகர் தெரிவித்து வந்தார்.