வன்னியர்கள்..! விக்கிரவாண்டி இடைத்தேர்தல் முடிவை தீர்மானிக்கும் வல்லமை படைத்தவர்கள்..! கடந்த ஒருமாத காலமாக இவர்களை மையமாக வைத்துதான் விக்கிரவாண்டி தேர்தல்களம் அனல் பறந்தது. வன்னியர்களின் வாக்குகளை மொத்தமாக அறுவடை செய்து, அதை வெற்றியாக மாற்றபோவது அமைச்சர் சி.வி.சண்முகமா? அல்லது திமுகவைச் சேர்ந்த பொன்முடியா? என்ற எதிர்பார்ப்பு தான் தற்போது தொகுதி மக்களிடையே நிலவி வருகிறது.
இந்த சூழலில் தான் முதலடியை வெற்றிக்கரமாக எடுத்து வைத்தது அதிமுக. திமுக மாவட்ட செயலாளர் பொன்முடி, வன்னியர் சமூகத்தினரை மதிப்பதில்லை என்ற கலகக்குரல் மாவட்டத்தில் பரவலாக பேசப்பட்டது. இதனை உறுதிபடுத்தும் விதமாக விக்ரவாண்டி தொகுதி திமுக வேட்பாளராக களம் இறங்கியுள்ள நா.புகழேந்தி, பொன்முடி இல்லத்தில் தரையில் அமர்ந்திருப்பது போன்ற புகைப்படம் ஒன்று அண்மையில் வெளியானது.
இதைப்பார்த்த தொண்டர்கள் திமுகவின் மாவட்ட பொருளாளராகவும், கழகத்தின் சார்பில் விக்கிரவாண்டி தொகுதி வேட்பாளராகவும் நிறுத்தப்பட்டுள்ள ஒருவரை, தமக்கு சமமாக உட்கார வைத்து பேசக்கூட பொன்முடிக்கு விருப்பமில்லை. அவர் வன்னியர் சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் மட்டுமே அவமதிக்கப்படுகிறார் என்று கூறி ஆதங்கப்பட்டனர்.
இந்த பிரச்னை முடிவதற்குள் மீண்டும் மற்றொரு பிரச்னை விஸ்வரூபம் எடுத்தது. அண்மையில் விக்கிரவாண்டி தொகுதிக்குட்பட்ட வாக்கூர் கிராமத்தில் நடைபெற்ற நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் பேசிய பொன்முடி, "வன்னிய சமுதாய மக்களுக்கு வாழ்வு கொடுத்தது உதயசூரியன் தான். ஆனால், நீங்கள் உதயசூரியனுக்கு வாக்களிக்காமல் துரோகம் செய்கிறீர்கள்" என்று பேசியுள்ளார்.
இதற்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக யார் உழைத்தது..! யார் பிழைப்பது..! என்ற தலைப்பில் நகரின் பல பகுதிகளில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டது. இதில் "திமுகவில் உழைக்கும் சமுதாயம் ஒன்று, பிழைக்கும் சமுதாயம் ஒன்று! உழைத்தவர்கள் கீழேயும், பிழைத்தவர்கள் மேலேயும் இருக்க துரோகிகள் என்ற பட்டம் வேறு! வன்னியர்கள் துரோகம் செய்ய துணிந்து இருந்தால் நீங்கள் ஒருவர் கூட MP ஆகி இருக்க மாட்டீர்கள். MT ஆகிஇருப்பீர்கள்" என்ற வசனம் பொருந்திய சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.
இப்படியாக தொகுதியில் பெரும்பான்மையாக உள்ள ஒரு சமூகத்தினரிடையே திமுகவுக்கு சரிவை ஏற்படுத்தும் வேலைகளை கனகச்சிதமாக செய்து முடித்தது எதிர்தரப்பு. இது குறித்து திமுகவின் மூத்த நிர்வாகிகளிடம் கேட்டபோது, "பொன்முடியின் அரசியல் வாழ்க்கையில் இக்கட்டான தருணங்களில் வன்னியர் சமூகத்தைச் சேர்ந்த இருவர் மட்டுமே பொன்முடிக்கு ஆதரவாக இருந்தனர்.
அதில் ஒருவர் இறந்துபோன விக்கிரவாண்டி தொகுதியின் எம்.எல்.ஏ ராதாமணி. மற்றொருவர் தற்போது வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கும் நா.புகழேந்தி. அந்த விசுவாசத்தைத்தான் இப்போதும் பொன்முடி திருப்பிக் காட்டுகிறார்" என்று கூறுகின்றனர்.
"சுவரொட்டிகள் ஒட்டுவது, திமுகவை வன்னியர்களுக்கு எதிரான கட்சியாக காட்ட நினைப்பது எல்லாம் அதிமுகவினர்தான்" என்றும் அவர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். இதுவரையில் மாவட்ட நிர்வாகிகள் அளவில் மட்டுமே இருந்து வந்த இந்த பிரச்னை எல்லை மீறி செல்வதை அறிந்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், இந்த பிரச்னைகளுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக அண்மையில் வெளியிட்ட அறிக்கையில்., 'திமுக ஆட்சி அமைந்தவுடன் வன்னியர்களுக்கு தனி உள் இடஒதுக்கீடு வழங்கப்படும் என அறிவித்தார்.